பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 பேராசிரியர் ந.சஞ்சீவி இணையும் உண்டோ? ஐவகை நிலத்தின் அழகும் அருமையும் அமைந்த அந்நாட்டின் பெருமை சான்ற தலைநகரிலேதான் திருக்குறள் முதலாய தெய்வத் தமிழ் நூல்களும் அரங்கேறின என்றால், அங்கு நிலைத்திருந்த புலவர் கூட்டுண்ணும் தமிழ்ப் பேரவையின் மாட்சிமைக்கும் நிகரும் உண்டோ? கூடலினாய்ந்த ஒண்தீந்தமிழின் சுவையை உண்டு களிக்க ஆண்டவனும் வட பால் கைலை வரையினின்றும் மெல்ல மெல்லத் தென்பால் வந்து கோயில் கொண்டுள்ள ஆலயங்கள் பலப்பல அமைந்து விளங்கும் செம்மை சான்றது வழுதியின் வளநாடு. இடையிடையே மதவெறிக் கொடுமைகள் மலியினும், பண்டுதொட்டு இன்றுவரை பல்சமயமும் ஒருங்கிருந்து ஓங்கி வளர்ந்த பண்பாடுடையது பாண்டிப் பெருநாடு. இலக்கியமும் வரலாறும் உணர்த்தும் இவ்வுண்மைக்கு ஓர் ஒப்பும் உண்டோ? எல்லாச் சமயங்கட்கும் உயிராய் - உட்பொருளாய் - விளங்கும் ஒரு பரம்பொருளின் திருவருளில் ஆரத்திளைத்த அத்தென்னாட்டில் எந்நாட்டவரும் வியக்க, எண்ணற்ற நீதி மன்னரும், நெறி பிறழா அமைச்சரும், விழித்த கண் இமையா வீரரும் பிறந்து அழியா விழுப்புகழ் கொண்டனர் எனின், அந்நாட்டின் அரசியல் மேம்பாட்டிற்கோர் உவமையுண்டோ? இவ்வாறு பல்வகையாலும் வானுயர் சிறப்புற்று விளங்கும் பாண்டி வளநாட்டில் - தமிழ்த்தாயின் மதிமுகமெனத் திகழும் திருநாட்டில் - வழிவழியாய்த் தமிழினத்தின் வீரத்தை விளக்கப் பிறந்த தீரப் புதல்வர்களுள் இருபெரு மாணிக்கங்களைப் பற்றி ஆராய்வதே இந்நூலின் தலையாய நோக்கம். ஆம். அவர்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கே ஒரு நூலும் வேண்டும் - இந்நூல்போல் பன்னூல்களும் வேண்டும் எனின், அவர்களை ஈன்ற தாய்நாட்டின் - தென்பாண்டிச் சீமையின் - புகழ் வான்சிறிதாப் போர்த்துவிடும் வல்லமை படைத்ததன்றோ? படைப்புக் காலந்தொட்டே விளக்கம் பெற்றிருக்கும் பேறு படைத்தவை பாண்டி நாடும் பாண்டியர் ஆட்சியுமென்பர் தமிழ்ப் பேரறிஞர். அவ்வளவு பழமை சான்ற அந்நாட்டின் எல்லையப் பற்றிக் கூறும் குறிப்புக்கள் பல தமிழ் இலக்கியங்களிலும், வரலாற்று ஏடுகளிலும், கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன. வெள்ளா றதுவடக்காம்; மேற்குப் பெருவழியாம்; தெள்ளார் புனற்கன்னி தெற்காகும்; உள்ளார ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம் பாண்டிநாட் டெல்லைப் பதி." என்பது ஒரு பழம் பாட்டு. இத்தகைய பாடல்கள் பற்றி டாக்டர் கால்டுவெல் தம் நூலின் விரிவாகக் குறிப்பிடுகின்றார்.