பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 76 பரந்த எல்லையையும் விரிந்த நிலப்பரப்பையும் கொண்ட பாண்டி நாட்டு ஆட்சியின் ஆரம்பகாலத்தைத் தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களாலும் என்று தொடங்கியது என்று ஆய்ந்துரைக்க இயலவில்லை. சுருங்கச் சொன்னால், பாண்டி நாடு காணாத காட்சி இல்லை; அத்திருநாட்டை ஆளாத ஆட்சி இல்லை. பாண்டிநாட்டைப் பற்றிய பெருமை பொருந்திய குறிப்புக்கள் பல, பாரத நாட்டின் மிகப்பழமையான நூல்களாகிய இராமாயணம், பாரதம் முதலியவற்றிலேயே காணப்படுகின்றன. இலங்கை வரலாற்றை இயம்பும் மகா வமிசத்திலும் பன்னூறு ஆண்டுகட்கு முன் பாரத நாட்டையும் இன்பத் தமிழகத்தையும் காலார மனமாரச் சுற்றிப் பார்த்து அதன் அழகிலும் வளத்திலும் சொக்கிப்போன பிற நாட்டுப் பேரறிஞர்களின் வரலாற்றுச் சிறப்புடைய குறிப்புக்கள் பலவற்றிலும் பாண்டி நாட்டின் பெருமை வெள்ளிடைமலையாய் விளங்குகிறது. அயல் நாட்டவர் குறிப்புக்களாலேயே அன்றி. அருமைத் தமிழ் நூல்கள் பலவற்றாலும் பொலிவு பெறும் மாறன் நாட்டின் மாட்சி அளவிட்டு உரைக்கும் நீர்மையதோ? பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் விளங்கும் பாண்டி நாட்டின் வரலாற்றைச் சங்க காலப் பாண்டியர் காலம், சோழப் பேரரசின் காலம், பிற்காலப் பாண்டியர் காலம், முகம்மதிய மன்னர்களின் காலம், விஜய நகர வேந்தர்கள் காலம், நாயக்கர் காலம், ஆர்க்காட்டு நவாபுகளின் ஆட்சிக்காலம், பிரிட்டிஷ் வல்லரசின் காலம் என்னும் எட்டுப் பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம். சங்ககாலப் பாண்டியர் வரலாற்றைப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் நமக்கு விளக்கி வைக்கின்றன. அசோகன் ஆட்சிக்கும் அடிமைப்படாத தமிழகம், சுதந்தர ஆட்சி நடத்திய பொற்காலம் சங்ககாலம். தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், வெற்றி வேற்செழியன், ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன், உக்கிரப்பெரு வழுதி, நன்மாறன் முதலான பாண்டி வேந்தர் தமிழர சோச்சிய அந்நாளில் பாண்டி நாட்டுத் துறைமுகங்களிலும், தலை நகரங்களிலும் ரோம கிரேக்க நாட்டு வணிகர்கள் தமிழகத்தின் பல்வளங்களை - சிறப்பாக முத்துக் குவியல்களை - வாங்கிச் செல்வதற்குக் கட்டித் திரவியங்களுடன் வந்து கையேந்திக் காத்திருந்தார்கள். எல்லா வகையிலும் செல்வச் செழுமை நிறைந்து தேசீய ஒளியும் இன்பமும் பொங்கித் திகழ்ந்த அப்பொற்காலத்திற்கு நிகரான நற்காலத்தை அதற்குப்பின் பாண்டி நாடும் தமிழகமும் கண்டதில்லை. கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில் பாண்டியப் பேரரசிற்கும் பல்லவப் பேரரசிற்கும் இடையே போராட்டம் ஏற்படலாயிற்று. அதன் விளைவாகத்