பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 பேராசிரியர் ந.சஞ்சீவி ஆண்ட நாயக்க மன்னராகிய முத்துக் கிருஷ்ணப்பருக்குப் பல்லாற்றாலும் பெருந்துணை புரிந்தார் சடையக்கர். இவ்வாறு உற்றுழி உதவி உறுதுணை புரிந்த சடையக்கரைத் தொன்மை வாய்ந்த மறவர் நாடு பல்லாற்றாலும் சீர் கெட்டு இருந்த நிலை மாறிச் சிறப்புறும் வகையில் அரசராய் ஏற்று, அவர் வாயிலாக மறவர் சீமைக்குப் புத்துயிர் அளித்த புகழ் மதுரை நாயக்கமன்னராகிய முத்துக்கிருஷ்ணப்பரையே சாரும் என்பது வரலாற்று ஆசிரியர்கள் துணிபு. பதினேழு ஆண்டுகள் பயன் செறிந்த நெறியில் ஆட்சி புரிந்த சடையக்கர், 1621-ஆம் ஆண்டு இயற்கை எய்தினர். அவருக்குப் பின் அவர் மைந்தர் கூத்தன் சேதுபதி என்பவர் 13 ஆண்டுகள் அமைதியாய் நாட்டை ஆண்ட பின் 1635-ல் காலமானார். கூத்தன் சேதுபதிக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, அவருக்குப்பின் அவர் சகோதரர் இரண்டாம் சடையக்கத்தேவர் எனப்படும் தளவாய் சேதுபதி அரசுரிமை பெற்றார். தளவாய் சேதுபதி, தமக்குப்பின் தம் தமக்கை மகனாராகிய இரகுநாத தேவருக்கு ஆட்சி உரிமையைத் தரத்தாம் கருதியிருப்பதை முன் கூட்டியே அறிவித்தார். இதன் விளைவாக நாட்டில் பெருத்த உள்நாட்டுக் கலவரம் மூண்டது. மறவர் சீமையின் ஆட்சி உரிமை குறித்து எழுந்த போர் அப்போது காளையார் கோவிலை ஆண்டு வந்தவரும் சடையக்கத்தேவரின் காதற்கிழத்தி மகனாருமான தம்பித் தேவருக்கும் தளவாய் சேதுபதிக்குமிடையே முற்றியது. இவ்வுள் நாட்டுப் போரால் மறவர் சீமையில் ஏற்பட்ட பிளவை நன்கு பயன்படுத்திக் கொண்டு தன் செல்வாக்கை வளர்க்க விரும்பியது மதுரை நாயக்கர் ஆட்சி. சற்றுமுன் சேதுபதிகள் நாட்டை மீண்டும் உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்தவர் மதுரை நாயக்க வேந்தராகிய முத்துக்கிருஷ்ணப்பரே எனப் பார்த்தோ மல்லவா? அவரால் உருவாக்கப்பட்ட மறவர் சீமை நாளுக்கு நாள் புகழும் பலமும் பெற்று வந்தமை, முத்துக்கிருஷ்ணப்பருக்குப்பின் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கட்குச்சற்றும் பிடிக்கவில்லை. மதுரையை அடுத்துப் பலமுள்ள ஓர் ஆட்சி பாண்டி நாட்டில் கால்கொண்டு இருப்பது என்றென்றைக்கும் ஆபத்தே என்று அவர்கள் கருதினார்கள். தளவாய் சேதுபதி காலத்தில் மதுரையை ஆண்டவர் புகழ் வாய்ந்த திருமலை நாயக்கர், வாய்த்த தருணத்தை வயணமாகப் பயன்படுத்தித் தமது வல்லமையை நிலைநாட்ட விரும்பினார். திருமலை நாயக்கரின் திருவுள்ளத்தை அறிந்த தம்பித்தேவர், அவர்பால் சரண் புகுந்தார். அடைக்கலமாய்ப் புகுந்த தம்பித்தேவரை ஆதரித்து அவரையே மறவர் சீமையின் மன்னராகப் பிரகடனம் செய்தார் திருமலை நாயக்கர்; அதோடு அவர்க்குப் பணமும் படை வலியும் பரிந்து அளித்து, தளவாய் சேதுபதியைத் தரணி ஆளும் பொறுப்பினின்றும் நீக்கவும் ஏற்பாடுகள் செய்தார். தளவாய் சேதுபதிக்குக் கலகக்காரன்' என்ற பெயர்