பக்கம்:மாபாரதம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

119

“அடியும், ஆண்மையும், வலிமையும், சேனையும்,
அழகும், வென்றியும், தத்தம்
குடியும், மானமும், செல்வமும், பெருமையும்,
குலமும், இன்பமும், தேசும்,
படியும் மாமறை ஒழுக்கமும், புகழும், முன்
பயின்ற கல்வியும் சேர
மடியுமால்; மதியுணர்ந்தவர் சூதின்மேல்
வைப்பாரோ மனம் வையார்”

என்று கூறினான். சூதாடுதல் தருமம் அன்று என்று கூறினான். “உம்முடைய கருத்து யாது?” எனத் தருமன் விதுரனைக் கேட்டான்.

“அறிவு கூறினேன்; ஆடாதே சூது என்றேன்; முறிவு ஏற்பட்டது; முடங்கி விட்டேன். செய்தி சொல்ல வந்தே னே அன்றிச் சூது ஆடுதல் செப்பம் உடையது என்று நான் கூறமாட்டேன். அழைப்புத் தந்தேன்; அதனை ஏற்பதும் ஏலாததும் உம் விருப்பம்” என்றான்.

வீமன் தக்க நீதிகள் சொல்லிச் சூது ஆடுதல் தகாது என்று ஏதுகள் கூறினான்.

“குழி வைத்து யானையைப் பிடிப்பர். அது குழி என்று தெரிந்ததும் அவ்வழியே அது எட்டிப்பார்க்காது. பழி என்று தெரிந்தும் விழிகளை மூடிக் கொண்டு நாம் அழியச் செல்வது கூடாது” என்று அருச்சுனன் கூறினான்.

“விதி கூட்டும் இறுதி இது என்றால் அதை மதி கொண்டு கழிப்பதுதான் சரியான கணக்காகும்” என்று அடுத்த தம்பியர் அறிவித்தனர்.

“மூத்தோர் சொல் வார்த்தை தட்டுவது கூடாது; இயலாது; பெரிய தந்தை அழைப்பு விடுத்து மறுப்புக் கூறுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/122&oldid=1048189" இலிருந்து மீள்விக்கப்பட்டது