பக்கம்:மாபாரதம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

131

அரசனின் இறையாண்மை ஆட்டம் கொடுத்தது. திருதராட்டிரன் நடுங்கிவிட்டான். பூகம்பமே உண்டாகிவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. போட்ட கணக்கெல்லாம் பூஜ்ஜியத்தில் முடிந்து விட்டதே என்று முதியோன் கவலைப்பட்டான்.

முதலில் தன் மக்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற தற்காப்பு உணர்வு ஏற்பட்டது. “அம்மா தாயே! உன் புருஷனை அழைத்துக் கொண்டு வீடு சேர்; நாடு பொருள் உரிமை எல்லாம் தந்து விட்டேன். உன் மைத்துனர்கள் விளையாட்டுத்தனமாகத் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடி விட்டார்கள். நமக்குள் நாம் அந்நியர் அல்ல; கண் மலரில் கைபட்டால் அதை வெட்டியா விட முடியும்? எங்களுக்கு ஏற்படுகின்ற துன்பம் உனக்கு அதில் பங்கு உண்டு. வீட்டுக்கு வந்த மருமகளே! எங்களுக்குக் கருணை காட்டு” என்று அவள் அருள் வேண்டி நின்றான்.

பாண்டவர் அனைவரும் விடுதலை பெற்றனர். எனினும் சகுனி எதிர் வழக்கு ஒன்று எழுப்பினான். “வாலை முறுக்கி விட்டீர்! புலி சும்மா விடாது. உங்களை நீங்களே அழித்துக் கொள்ளும் ஆரம்பம் இது” என்றான்.

திரெளபதியும் அவர்கள் தரும் விடுதலையை விரும்ப வில்லை; அங்கேயே இருந்து செத்து மடிவதற்கு உறுதி பூண்டாள். மறுபடியும் சூதாடி வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினாள்; தருமனை அவளே மறுபடியும் ஆடத் தூண்டினாள். இறுதிச்சுற்று வெற்றி தோல்வி என்ற இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சகுனிக்கு மனம் நடுக்கம் ஏற்பட்டது. தருமன் தான் செய்த புண்ணியம் அனைத்தும் பணயமாக வைத்தான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/134&oldid=1037000" இலிருந்து மீள்விக்கப்பட்டது