பக்கம்:மாபாரதம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



12

மா பாரதம்

அவனை வாழ்த்தி யயாதி காலன் அழைக்கத் தன் கணக்கை முடித்துக் கொண்டான்.

யயாதிக்குப் பின் தோன்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் குரு, பரதன், அத்தி என்பவர் ஆவர். குரு என்பவன் கற்றவன். நூல்பல செய்தவன்; ஆசான் என்று முன் கூறப்பட்டது. பரதன் என்பவன் துஷியந்தனுக்கும் சகுந்தலைக்கும் பிறந்தவன் நாட்டியக்கலை நன்கனம் வகுத்துப் பரதம் என்னும் நூலைச் செய்தவன். இவன் பெயரால்தான் இந்த நாடு பரத கண்டம் எனப் பெயர் பெறுவது ஆயிற்று; அத்தி என்பவன் நிர்மாணித்ததால் அவர்கள் தலைநகர் அத்தினாபுரி எனப் பெயர் பெறுவது ஆயிற்று.

சந்தனுவின் தோற்றம்

புகழ்மிகு குருகுலத்தில் பிற்காலத்தில் தோன்றியவன் சந்தனு அரசன். இவனுக்குப் பின்னால்தான் பாரதமன்னரின் சரித்திரம் ஒழுங்காகக் கிடைக்கிறது. இவன் திருதராட்டிரன், பாண்டு இவர்களின் பிதாமகன் ஆவான்.

சந்தனு மன்மதன் என விளங்கிய நாட்களில் வன வேட்டையாடக் கங்கைக் கரையை அடைந்தான். அங்கே ஒரு மங்கை நல்லாளைக் கண்டு நயப்புக் காட்டினான் அவன் அவளைக் கண்டதும் ஒர் கவிஞன் ஆனான்; அவள் வனப்பைக் கண்டு அவ்வணிதை வான்மகளோ என ஐயம் கொண்டான். கண்கள் இமைத்தன; கால்கள் காசினியில் தோய்ந்தன; அதனால் இவள் மண்மகளே என முடிவு செய்தான். கண்கள் காதற் குறிப்பைக் காட்டின. ஒருவரை ஒருவர் காதலித்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/15&oldid=1239405" இலிருந்து மீள்விக்கப்பட்டது