பக்கம்:மாபாரதம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராசீ

13

அவள் ஒரு விதி வகுத்தாள். அதை எந்தநாளும் காக்க வேண்டும் என உறுதி கேட்டாள் அதற்கு அவன் சம்மதித்தான். தான் எது செய்தாலும் தடுக்கக்கூடாது. தடுத்தால் விடுதலை பெற்று விலகுவதாக அச்சுறுத்தினாள். விடுதல் அறியா விருப்பினனாகி அவளிடம் வேண்டிய இன்பம் பெற்றான்.

இல்லற வாழ்வு அரும்பி மலர்ந்து ஏழு தளிர்களை ஈன்றது. பிறந்தபோதே அக்குழந்தைகளைத் துளிர்விடாமல் கிள்ளிக் களைந்து விட்டாள். அவற்றிற்கு ஜனன மரணக் கணக்கு ஒரே நாளில் எழுதப்பட்டது. கங்கை நீரில் தூக்கி எறிந்துவிட்டாள். அவன் வாய் திறவா மவுனியாக இருந்துவிட்டான். தடுத்தால் அவளை இழக்க வேண்டும் என்பதால் தாயுரிமைக்கு மதிப்புத் தந்தான். தாய்வடிவில் அவள் பேயாகச் செயல்பட்டாள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான். அவன் பொறுமைக்கும் ஒர் எல்லை ஏற்பட்டது. எட்டாவது குழந்தை பிறந்தது. மூக்கும் முழியுமாக இருந்த அந்தக் குழந்தை அவனை நோக்கி ‘வாழப்பிறந்தவன்’ என்று சொல்வது போல இருந்தது. நீரில் அவனை ஆழ்த்தி மூழ்கடிக்க விரும்பவில்லை.

‘மங்கலம் என்ப மனைமாட்சி’ என்று அரை குறையாகப் படித்தவன்; அவன் ‘அதன் நன்கலம் நன்மக்கட் பேறு’ என்று அடுத்த அடியையும் முழுமையாகக் கற்றான். அவன் மனம் பண்பட்டது. மனைவியின் முயக்கத்தைவிட மழலை மொழியின் மயக்கமே சிறந்தது எனக்கண்டான்.

‘போடாதே போடாதே என் மகனை. பொல்லாத செயல்கள் இனி நீ செய்ய வேண்டாம்’ என்று கூறித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/16&oldid=1239406" இலிருந்து மீள்விக்கப்பட்டது