பக்கம்:மாபாரதம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

மாபாரதம்


“வேண்டிய வரம் கேள் தருகிறேன்” என்றான் கண்ணன்.

“பிறப்பு என்பது ஒன்று உண்டாயின் இரப்போர்க்கு இல்லை என்று சொல்லாத இதயம் நீ அளித்தருள்க” என்றான்.

மனம் இருந்தால் மட்டும் போதுமா? கொடுக்கத் தனமும் இருக்க வேண்டாமா?

“எத்தனை பிறவி எடுத்தாலும் ஈகையும், அதற்கு வேண்டிய பொருட் செல்வமும் அடைந்து இறுதியில் முத் தியும் பெறுவாய்” என்று வரம் ஈந்தான் கண்ணன். திருமால் தன் திவ்விய உருவை அவனுக்குக் காட்சி தந்தான். அவன் தான் கண்ட தெய்வக் காட்சியை வியந்து போற்றினான்.

“நீல மலையும், கார் மேகமும், கடல் நீரும், காயா மலரும் நிகர்க்கும் திருமேனியும், கதை, வாள், சங்கு, நேமி, கோதண்டம் இவை தாங்கிய திருக்கரங்களும் துளசி மாலை அணிந்த மார்பும், திரண்ட தோள்களும், நீல மணிபோன்ற கழுத்தும், சிவந்த இதழும், தாமரை போல் மலர்ந்த முகமும், கதிர்முடியும் இம்மையில் காணப் பெற்றேன்” என்று கூறி அதே நினைவில் தன் உயிரை விட்டான்; கண்ணனின் திரு உருவம் அவன் நினைவுகளில் நிறைந்தது.

கன்னன் அம்புகளை எய்ய முற்பட்டான்; தான் கற்ற வித்தைகள் கை கொடுக்காமல் அவனைக் கைவிட்டன. பரசுராமன் தந்த சாபத்தால் இந்த மறதி ஏற்பட்டுக் களத்தில் போர் செய்வதில் உளம் இன்றி அயர்ந்து நின்று விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/255&oldid=1048269" இலிருந்து மீள்விக்கப்பட்டது