பக்கம்:மாபாரதம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

29

மன்னன் மகனை விழியில்லாதவன் என்று சிலர் ஏசிப் பேசினர். காந்தாரி அதற்காகக் கூசி மறுப்புச் சொல்ல வில்லை; விதி அளித்தது என்று உள்ளம் மகிழ்ந்தாள்; அருந்ததி போன்ற கற்புடைய அவள் அக்குறையைப் போக்கத் தக்க மருந்தாகத் தன் பார்வையை மறைத்துக் கொண்டாள்.

இமைத்த கண்கள் கொண்டு இனி நோக்குவது இல்லை என்று துணிப்பட்டை ஒன்று நெற்றியில் கட்டி மறைத்துக் கொண்டாள். செவிப்புலன் மட்டும் இருவருக்கும் பொதுவாக இயங்கியது. காணுதல் தவிர மற்றைய புலன்கள் உறவாடின. அவன் கண்ட இருள் அதனைத் தானும் பங்கிட்டுக் கொண்டாள்.

பாண்டுவின் மணம்

சூரன் என்ற பெயருடைய யதுகுல அரசனின் மகள் குந்தி ஆவாள். பிரதை என்பது அவள் பெற்றோர் வைத்த பெயராகும். சூரனின் அத்தை மகனான குந்திபோசன் என்பவனுக்கு மகவு இல்லை. அதனால் இவளை அவன் வளர்த்துக்கொள்ள அனுமதித்தான். குந்தி என்ற பெயரைப் பெற்றாள். அவளைப் பாண்டுவிற்கு மணம்பேசி அவனுக்கு மனைவியாக்கினர். அவள் கன்னிப் பருவத்தில் துர்வாச முனிவனை உபசரித்து அவனால் பாராட்டப் பெற்று மந்திரங்கள் உபதேசிக்கப்பெற்றாள்; அதைச் சொல்லி யாரை அழைத்தாலும் அவன் அவளைக் கூடி மகவு நல்குவான் என்று சொல்லிவிட்டுப் போனான். மந்திரம் கற்ற அவள் அவசரப்பட்டாள்; முனிவன் மறைவதற்கு முன் அந்த மந்திரத்தைக் கன்னிமாடத்தில் சொல்லக் கதிரவன் அவள் நினைத்தபடி வந்து சேர்ந்தான். அவளுக்கு அது அதிர்ச்சியைத்தந்தது. கனல் போல் எரித்து அழித்துவிடுவான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/32&oldid=1034224" இலிருந்து மீள்விக்கப்பட்டது