பக்கம்:மாபாரதம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

மாபாரதம்

என்று அஞ்சி அவனுக்கு அவள் தன் கன்னிமையைத் தந்தாள். கன்னனைப் பரிசாகப் பெற்றாள்.

கர்ணன் என்பது வடமொழிப்பெயர். அதனைத் தமிழில் கன்னன் என்றே வில்லிபுத்துாரார் வழங்குவர்; அந்தப்பழியை மறைக்க அவனைப் பெட்டி ஒன்றில் வைத்துக் கங்கையில் விட்டு “எங்குச்சென்றாலும் வாழ்க” என்று வாழ்த்தி அனுப்பினாள்; மணமாவதற்கு முன் மகனைப் பெற்ற அவள் அதை மறைத்து வைத்துவிட்டுப் பாண்டுவிற்குக் கழுத்தை நீட்டினாள்.

குந்திக்குச் சுயம்வரம் வைத்தே மணமகனை உறுதி செய்தனர். குமுதம் சந்திரனைக்கண்டு மலரும்; அதுபோலக் குந்தி பாண்டுவையே தேர்ந்து எடுத்து மலர்மாலை சூட்டினாள். தவறுகள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத் தடையாகவில்லை என்பதை அவள் வாழ்க்கை காட்டியது.

மற்றும் மத்திர நாட்டு அரசன் அவனும் தன் மகள் மாத்திரியைப் பாண்டுவிற்கு அடுத்து மணம் செய்து கொடுத்தான்; புதுமணத் தம்பதியராக மாத்திரியோடு பாண்டு சோலைகுச் சென்று களித்து விளையாட விரும்பினான்.

அங்கு வேட்டையாடி வன விலங்குகளை மாய்த்து மகிழ்ந்தான்.

அங்கு ஒரு கலை மானும் அதன் பிணையும் மகிழ்ந்து இணைந்து இருந்தன; அவன் அம்பு பட்டுக் கலைமான் துடித்து அவன் முன் விழுந்தது, அது ஒரு முனிவன் வடிவம் கொண்டது. அவன் பாண்டுவின் கண்முன் இறந்தான் பெண் மானும் மானுட வடிவம் பெற்றுப் பின் உயிர் நீத்தது. அம்முனிவன் பெயர் கிந்தமன் என்பதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/33&oldid=1048282" இலிருந்து மீள்விக்கப்பட்டது