பக்கம்:மாபாரதம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

மாபாரதம்

வேண்டாமா? ஒழுக்க வரையறை தனி மனிதனின் கட்டுப் பாட்டுக்கு உதவுவது: சமூக நலனுக்காக அதைச் சிறிது மாற்றிக் கொள்ளும் உரிமையும் அறிவும் தேவைப் படுகின்றன. பின் அதுவும் நியாயம்தான் என்று உலகம் பேசும். பயனைப் பொறுத்துத்தான் நன்மை தீமைகள் முடிவு செய்யப்படும்” என்று தொடர்ந்து அறிவுரை கூறினான்.

அதற்குப்பிறகு அவள் இசைவுதந்தாள்; தான் துர்வாச முனிவனிடம் மந்திரம் பெற்றுள்ள வரலாற்றை விளம்பினாள். கன்னனின் பிறப்பை மட்டும் சொல்லவில்லை. அதனால் அவன் மனம் வருந்தும் என்பதால் அச் செய்தியை மறைத்து விட்டாள். அறிவுள்ளவள்; அதனால் தேவையானது மட்டும் செப்பினாள்.

அவள் மந்திரம் பெற்றுள்ள இச்செய்தி கேட்டு அவன் மகிழ்ச்சி பன் மடங்கு ஆகியது. அவனிடம் அனுமதி பெற்று அவள் தருமத்தின் தலைவனாகிய யமனை நினைத்து மந்திரம் சொன்னாள். அறக்கடவுள் ஆகிய எமதருமன் அவளுக்கு அருள் செய்தான்; அதனால் தருமன் பிறந்தான்; இவனே மூத்த மகன் எனக் கருதப் பட்டான். இச்செய்தி எங்கும் பரவியது; குந்தி தனக்கு முந்தி மகனைப் பெற்றுவிட்டாள் என்ற செய்தி காந்தாரிக்குப் பொறாமையைத் தாண்டியது; நூறு மகவு பிறக்க இருந்த கரு தன்னுடையது; இரண்டாண்டுகள் ஆகியும் உருப்பட்டு வெளிவர வில்லையே என்ற வேதனையால் அம்மிக்குழவி கொண்டு வயிற்றில் மோதிக் கொண்டாள். அவசரப்பட்டுச் செயல்பட்டது தவறாக முடிந்தது. கரு நிலை பெயர்ந்தது.

பையோடு கழன்று விழுந்த கரு பார்மிசை குருதி பெருக விழுந்தது; இதை அறிந்த வியாசன் ஓடோடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/37&oldid=1048286" இலிருந்து மீள்விக்கப்பட்டது