பக்கம்:மாபாரதம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

மாபாரதம்


துரியன் தந்த தொல்லைகள்

பாண்ட வரும் துரியோனாதியரும் மனவேறுபாடு அற்றுப்பழகி வந்தனர். எனினும் தருமனைப்பற்றி நகரத்தவர் புகழ்ந்து பேசுவதைத் துரியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதிர்பாராத விதமாகத் தேரோட்டியின் வளர்ப்பு மகனான கன்னன் இவனுக்கு நெருங்கிய நண்பன் ஆனான். வலிமை மிக்க வீரன் ஒருவன் தனக்கு நண்பனாக வாய்த்ததால் அவன் தலை கனத்தது. சொந்த வலிவால் அவன் நிற்காமல் துணை வலியால் துள்ளினான். தொடர்ந்து வீமனுக்குத் தொல்லைகள் தந்தனர். ஒரு நாள் கங்கை நீரில் இவர்கள் அனைவரும் நீந்தி விளையாடிக் கரை ஏறினர். பிறகு வீடு வந்து சேர்ந்த வீமனைக் கயிறு கொண்டு கட்டி அவனைக் கங்கை நதியில் போட்டனர். இலக்குவன் இந்திரஜித்தின் நாகபாசத்தில் இருந்து விடுபட்டது போல அக்கயிறுகளை அறுத்து முறித்துக் கொண்டு வீமன் வீடு வந்து சேர்ந்தான்.

இவ்வாறே வீமனுக்குத் துரியன் தொடர்ந்து தொல்லைகள் தந்தான்; அவன் துங்கிக் கொண்டிருக்கும்போது அவன் மீது பாம்புகளை ஏவிக் கடிக்கவிட்டான். வீமன் அவற்றை மூட்டைப் பூச்சிகளை நசுக்குவது போலக் கை களால் பிசைந்து தூக்கி எறிந்தான்.

மற்றொரு நாள் நீரில் குதித்து விளையாடும் போது நீரில் ஈட்டிகளைப் புதைத்து வைத்தான், ஈட்டிகள் தோறும் வண்டுகள் வீற்றிருந்தன. கண்ணன் வண்டுகள் வடிவில் அவனைக் காத்தான். துரியனின் வஞ்சனையை அறிந்து வீமன் தன்னைக் காத்துக் கொண்டான்.

பின்னரும் ஒரு நாள் அவன் உண்ணும் சோற்றில் நஞ்சு கலந்து அவனைக் கொல்லச் சதி செய்தான். விடத்–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/41&oldid=1048289" இலிருந்து மீள்விக்கப்பட்டது