பக்கம்:மாபாரதம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

மாபாரதம்

இளமையின் இனிமையை நுகர்ந்தனர். அவளும் குந்தி யிடம் அன்பும் மதிப்பும் வைத்து மற்றவர்களுக்கு உதவி மாமி மெச்சும் மருமகளாக வாழ்ந்தாள். அவள் பணி அவர்களுக்கு மிகவும் பயன்பட்டது.

காதல் வினையில் ஒரு நன் மகனை இடிம்பி பெற்றெடுத்தாள். தாயின் நிறமும், தந்தையின் திறமும் கலந்த கலவையாக அவன் விளங்கினான். அவனும் வளர்ந்து மதிக்கத்தக்க வயதும் அறிவும் பெற்றவனாக விளங்கினான். திண்மையும் உரமும் பெற்றுத் தறு கண்மையோடு அச்சிறுவன் விளங்கினான். கடோற்சகன் என்னும் பெயர் அவனுக்கு அமைந்தது. அவன் தம் தந்தைமாரை நோக்கி “வேண்டும் போது நான் வந்து உங்களுக்கு உதவுவேன்” என்று கூறித் தன் தாயோடு அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தம் சொந்த ஊராகிய இடிம்ப வனத்தை அடைந்தான். வியாசன் கூறியபடி பாண்டவர்கள் அந்தணர் மிக்கு வாழும் வேந்திரகீயம் நோக்கிப் புறப்பட்டனர்.

ஏக சக்கர நகரம் என்ற ஊரின் அக்கிரகாரப்பகுதி வேத்திரகீயம் எனப்பட்டது. வேத சாத்திரம் கற்ற முனிவர்களைப் போலப் பாண்டவர்கள் தம் உருவத்தை மாற் றிக் கொண்டு கோத்திரம், சூத்திரம், குடிப்பெயர்கள் இவற்றைக் கொண்டு அவர்களோடு தங்கி உறவுகொண்டனர்.

அந்தணர் ஐவரும் அவர்கள் தாயரும் அந்த நகர் வந்தனர். கோத்திரம் பேசிப் பாத்திரத்தோடு வந்த வரைச் சாத்திரம் அறிந்த அந்தணர் என்று ஊரவர் கருதி ‘அதிதியர்’ வந்துள்ளனர் என முகமன் கூறி அவர்களை வரவேற்றனர். அவர்களுள் நல்லுள்ளம் படைத்த அந்தணன் ஒருவன் தன் மனையில் வந்து தங்கி இருக்கும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/63&oldid=1048306" இலிருந்து மீள்விக்கப்பட்டது