பக்கம்:மாபாரதம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

மாபாரதம்

இருவரும் மற்போர் தொடங்கினர். கைகளும் கைகளும் பிணைத்தனர். கால்களோடு கால்களைப் பின்னிக் கொண்டனர். தலையோடு தலை மோதிக் கொண்டனர். கொடிய சிங்க ஏறுபோல உறுமிய வண்ணம் அவர்கள் மற்போர் செய்தனர். பின் மரங்களைக் கொண்டு தாக்கிக் கொண்டனர். கற்களை வீசிக் குருதிக் கறைபட மலைந்தனர். களிறுகள் செய்யும் போரினை அக்காளையரிடம் காணமுடிந்தது.

வீமன் விட்ட உதையால் பகனின் விலா எலும்பு சிதைந்தது; மார்பு குன்றியது; முதுகு முறிந்தது; இரு கன்னங்களும் குழிந்தன. நீட்டிக் கொண்டிருந்த பற்கள் தம்மைக் காட்டிக்கொள்ளாது மண்ணில் விழுந்தன. அவன் செயலிழந்து மரம் போல நின்று விட்டான்.

உணவு இல்லாது பசியால் வாடிய அந்த அரக்கன் மேலும் மேலும் தாக்கப் பெற்றுத் தளர்ந்து சாய்ந்தான். அவன் மார் பின் மீது யானையின் மத்தகம் நோக்கிப் பாயும் சிங்கத்தைப் போல ஏறி மண்டியிட்டு உட்கார்ந்து அவன் கழுத்தை நெரித்துத் திருகி அவன் உயிரைப் போக்கி அவனை அவ்வண்டியில் தூக்கி எறிந்து போட்டுக் கொண்டு அதனை ஊர் வெளிப்புற வாயிலில் கொண்டு சேர்த்தான்.

ஏக சக்கர வனம் என்ற அப்பெருங்காட்டில் தங்கி இருந்து ஊருக்கு ஊறு விளைவித்து வந்த அசுரனை வீமன் தாக்கிக் கொன்று அவர்கள் தொல்லைகளைத் தீர்த்தான். அவனும் நீரில் சென்று நீராடி உடற்களைப்பைப் போக்கிக் கொள்ளச் சென்றான். ஊரார் புகழத்தான் தங்கியிருந்த இடம் வந்து சேர்ந்தான். அவர்களை வணங்கி அடக்க ஒடுக்கமாகத தான் செய்த செயலைச் சுருக்கமாகக் கூறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/69&oldid=1035191" இலிருந்து மீள்விக்கப்பட்டது