பக்கம்:மாபாரதம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

வடமொழியில் எழுதிய இராம காதையையும் மாபாரதத்தையும் தமிழ்ப்படுத்திய கம்பரும் வில்லிபுத்துராரும் அவற்றை வெறும் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. தமிழ் இன்பம் தோன்றும்படி அவற்றைத் தம் கவிதையாற்றலால் சுவைபடத் தந்துள்ளனர். அதனால் இப் படைப்புகள் மூல நூலில் உள்ள கதையும், தமிழ்க் கவிதையும் கலந்து மாபெரும் காப்பியங்களாகத் திகழ்கின்றன. இவையே இன்று மேடைகளிலும் அரங்குகளிலும் செவி நுகர் கனிகள் என்று பேசப்படுகின்றன.

வில்லி பாரதமும் பட்டி தொட்டிகளில் பாரதப் பிரசங்கங்களாகப் பேசப்பட்டது. இன்று உரை நூல்கள் வந்துவிடுவதால் இருந்த இடத்தில் இருந்து இந்நூல்களின் அருமை பெருமைகளை உணர வாய்ப்பு ஏற்பட்டு விட்டதால் பாரதப் பிரசங்கங்கள் குறைந்து விட்டன.

வில்லி பாரதம் இக் கதையினை ‘மாபாரதம்’ என்ற தமிழ்ப் பெயராலேயே அழைக்கிறது. மற்றும் வட மொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தித் தந்துள்ளது. கர்ணன் என்பதைக் கன்னன் என்று வழங்குகிறது. பீஷ்மன் என்பதை வீடுமன் என்றே வழங்குகிறது. காரணம் வட சொற்களைத் தமிழில் சொல்லும்போது தமிழ் ஒசைபட அமைய வேண்டும் என்பது மொழியியல்பு. எனவே தமிழின்பம் தோன்றச் சந்த ஒசைபட எழுதப்பட்ட இந் நூல் பெரிதும் போற்றப்பட்டு வருகிறது.

வில்லியும் வியாச பாரதத்தைக் கற்றவர்தான். அவருக்குக் கிடைத்த ஏட்டுச் சுவடி எதுவோ அதுவே அவருக்கும் மூலநூலாக அமைந்து இருக்க வேண்டும். அதைப் பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/8&oldid=1239384" இலிருந்து மீள்விக்கப்பட்டது