பக்கம்:மாபாரதம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

79

என்று நினைத்துக் கொண்டு சிவந்த விழிகளையுடைய கன்னன் அவமதித்து அவன் மீது அம்பு எய்ய அருச்சுனன் அதனை இரண்டாகப் பிளந்தான்; மற்றோர் அம்பு கன்னனின் மார்பைத் தாக்கியது; வீமன் சல்லியனைக் குத்தித் தூக்கி எறிந்தான். தோல்வி கண்ட சல்லியனும் கன்னனும் வென்றாலும் தோற்றாலும் அந்தணர்களோடு போர் செய்தல் வசையே என்று எண்ணிப் போர் தொடுக்காமல் அடங்கி விட்டனர்.

“இவர்கள் நூல் முனிவர் அல்லர்; வானத்தரசர் இந்திரன்.வாயு இவர்களின் குமரர்” என்பதைக் கண்ணன் குறிப்பால் அறிவுறுத்த மண்ணகத்து மன்னர் எல்லாம் பேசாமல் தாம் வந்த வழியே சொந்த நாடு நோக்கிச் சென்றனர்.

குந்தியைச் சந்தித்தல்

தட்டிப்பறித்துக் கொண்டு வந்த கனியை எவ்வாறு வெட்டிப் பங்கிட்டுக் கொள்வது என்று தெரியாமல் வீடு விரைந்தனர். வெளியே வீட்டு மருமகளை நிறுத்தி வைத்து விட்டு “இன்று பெற்றனம் ஒர் ஐயம்; என் செய்வது?” என்று செப்பினர்.

இரந்து பெற்ற உணவைப் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தினால் இவ்வாறு கூறவே உள் இருந்த அன்னை அமுது என நினைத்து “நீர் சேர அருந்துவீர்” என்று சொல்லி வரவேற்றாள். வெளியே சென்று கள்ளவிழ் கூந்தலாளைக் கண்டாள். பிறகு தான் செய்த தவற்றை உணர்ந்தாள். கரும்பு என நின்ற காரிகையை விரும்பி எப்படிப் பகிர்வது என்று அதிர்ச்சி அடைந்தாள்.

“என்ன நினைத்து என்ன சொல்லி விட்டேன்; என்ன செய்தேன்” என்று சொன்ன சொல்லில் சோர்வு கண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/82&oldid=1048321" இலிருந்து மீள்விக்கப்பட்டது