பக்கம்:மாபாரதம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

மாபாரதம்


சித்திராங்கதையை மணத்தல்

அடுத்த பயணம் தென்தமிழ் நாடாக அமைந்தது; வேங்கடவன் குன்றத்தில் திருமாலை வழிபட்டுப் பின் தொண்டை நாட்டுக் காஞ்சி நுழைந்தான்; அங்கே அறம் வளர்த்த செல்வியாகிய காமாட்சி அம்மன் திருக்கோயிலை யும், வரதராசர் திருச்சந்நிதியையும் சென்று வழிபட்டுப் பின் சிவன் நெருப்பு வடிவத்தில் தங்கி இருந்த திருவருணை எனப்படும் திருவண்ணாமலையையும். சோழ நாட்டில் தில்லையம்பதியையும் வணங்கி விட்டுத் தென்றற் காற்று தமிழ் பாடும் மதுரையை அடைந்தான்.

பாண்டிய நாட்டை ஆண்டு வந்த சித்திரவாகனன் அந்தண வடிவத்தில் சென்ற அருச்சுனனை வரவேற்று உபசரித்தான்.

“நீர் எங்கு வந்தீர்?” என்று கேட்டான்.

“கன்னியைக் கண்ணுற்று ஆட வந்தனன்” என்றான்; கன்னியாகுமரி என்ற ஊர்ப் பெயரும் கன்னிப் பெண் என்ற பொருளும் அமையச் சிலேடை நயம் தோன்றப் பேசினான். குமரியாட வந்த குமரனாக விளங்கினான்.

அருச்சுனனும் மற்றைய அயல் நரட்டு அந்தணர்களும் தவசிகளும் சோலை ஒன்றில் தங்கப் பாண்டியன் ஏற்பாடு செய்திருந்தான். உணவும் உறையுளும் அங்கு அவனுக்கு ஏற்பாடு ஆயின.

அங்கே தோட்டத்தில் வெள்ளைப்பசு ஒன்று மேய்ந்து கொண்டிருத்தது. அதன் சொந்தக்காரர் யார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டான். அவள் சித்திர வாகனன் பெற்ற சித்திராங்கதை என்பதை அறிந்தான். அவளை நோட்டம் விடுவதற்கு அந்தத்தோட்டம் வழிச் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/93&oldid=1036093" இலிருந்து மீள்விக்கப்பட்டது