பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"ஐயா வணக்கம்!" என்ற குரல் கேட்டுத்திண்ணைப் பள்ளிக் கூடத்து ஆசிரியர் வாசல் பக்கம் திரும்பிப் பார்த்தார்.

அவரிடம் பத்தாவது வகுப்புப் பாடம் படிக்கும் மணிவண்ணன் நின்று கொண்டிருந்தான்

"மணிவண்ணா, வா. நீ திருவிழாவுக்குப் போகவில்லையா?" என்று கேட்டார் ஆசிரியர்.

"போகவில்லை" என்றான் மணிவண்ணன்.

“என்ன! ஏதேனும் செய்யுள்படிக்க வேண்டும் என்று வந்தாயா?" என்று கேட்டார் ஆசிரியர்.

செய்யுள் பாடம் மற்ற பிள்ளைகளுக்கு வேப்பங்காய் மணிவண்ணனே அதை மிகவும் விரும்பிப் படித்து வந்தான். அதனால்தான் ஆசிரியர் அப்படிக் கேட்டார்.

"அதற்கில்லை ஐயா, தங்களிடம் ஓர் யோசனை கேட்க வந்தேன்" என்று மணிவண்ணன் கூறினான்.

ஆசிரியருக்கு வியப்பாய் இருந்தது. மணிவண்ணன் தன்னிடம் அப்படி என்ன யோசனை கேட்கப் போகிறான் என்று வியப்புடன் அவனை உற்று நோக்கினர்.

33