பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

85

கடவுளின் கருணை என்றே தான் மதிக்க வேண்டும். நான் சிறைச்சாலையில் இருந்து விடுபட்டு வந்த பிறகு ஒவ்வொரு தினம் தங்களுடைய ஜெவான்கள் இங்கே வந்து என்னை ஆஜர் பார்த்து நான் ஒழுங்கான வழியில் நடப்பதாக எழுதிக் கொண்டு போயிருக்கிறார்கள் என்ற விஷயம் தங்களுக்குத் தெரியாததல்ல. அப்படி இருந்தும், தாங்களே என்மேல் சந்தேகம் கொள்வது தெய்வ சம்மதமாகுமா என்பதை எஜமான்கள் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்” என்றான்.

இன்ஸ்பெக்டர், “அதுதான் சாமர்த்தியம். போலீசாருடைய கண்ணுக்கு எதிரிலேயே திருடுகிறவன்தான், உண்மையில் திருட்டு உத்தியோகத்துக்கு யோக்கியம் வாய்ந்தவன். மறைவில் திருடுகிறவன் எதற்கு உபயோகப்படுவான். அவனை சுத்தப்பேடி என்று தான் சொல்ல வேண்டும். போலிஸ் ஜெவான்கள் உம்மைப் பற்றி அப்படிப் புகழ்ச்சியாக ஒன்றும் எழுதிவிட வில்லையே. உம்முடைய நடத்தையைப் பற்றி அவர்கள் சந்தேகமாகத் தான் எழுதி இருக்கிறார்கள். நீர் இருப்பது ஏகாங்கி; ஏற்கனவேயே இருந்த மாளிகையே உமக்கு எதேஷ்டமானது. இதை நீர் மாற்றி உப்பரிகைகள் வைத்து வேறுவிதமாகப் புதுப்பித்து இவ்வளவு அவசரமாக வேலை செய்ததை எல்லாம் அவர்கள் உடனுக்குடன் எழுதி அனுப்பி இருப்பதன்றி, நீங்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் பரம ரகசியமாகவும், சந்தேகாஸ்பதமாகவும் இருக்கின்றன என்றும், தாங்கள் ஒவ்வொரு நாளும் இங்கே வந்து கவனித்துப் பார்த்துக் கொண்டிருப்பது அவசியம் என்றும், தாங்கள் உம்மிடம் அந்தரங்க சிநேகிதர் போலவே நடித்து உம்மோடு சந்தோஷமாகவே இருந்து உம்முடைய ரகசியங்களைக் கிரகிப்பதாக அல்லவா ஜெவான்கள் எழுதிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் எழுதிக் கொண்டு வந்ததற்குத் தகுந்தபடி தானே இப்போதும் காரியமும் நடந்திருக்கிறது” என்றார்.

மாசிலாமணி, “ஒகோ! அப்படியா எழுதி இருக்கிறார்கள்! இப்படிப்பட்ட ஜெவான்கள் இருப்பதனால் தான் இந்தப் போலீஸ் இலாகாவைக் கண்டு ஜனங்கள் தாறுமாறாக