பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

89

பட்டிருக்கும். அவைகளை எல்லாம் திறந்து ஓரிடம் விடாமல் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறி, பக்கத்தில் இருந்த மேஜையின் மீது கிடந்த கொத்துச் சாவியை எடுத்து நீட்டினான். இன்ஸ்பெக்டர்”சரி, நீர் உமக்கு ஒன்றும் தெரியாதென்றே கடைசி வரையில் சொல்லிக்கொண்டிரு. நான், இது உம்மால்தான் ஆயிருக்கிறதென்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன். தஞ்சாவூரில் இருந்து ரயில் இந்த ஊருக்கு இந்நேரம் வர முடியாதென்பது நிஜந்தான். ஆனால், இவ்விடத்தில் இருந்து அந்த ஊர் சுமார் முப்பது மைல் தூரம் இருக்கலாம். மோட்டார் வண்டி சாதாரணமாக இரண்டு மணி நேரத்தில் இங்கே வந்து சேர்ந்துவிடும் என்பது உமக்குத் தெரியாதா? ஆகையால், அவர் இங்கே வந்திருக்கமாட்டார் என்றே நாம் எப்படி எண்ணிக் கொள்ளுகிறது. சரி வாரும். வீடு முழுவதும் பார்த்துவிடுவோம். நீரே முன்னால் போய் ஒவ்வோரிடமாகக் காட்டும். நாங்கள் பின்னால் வருகிறோம்” என்றார்.

மாசிலாமணி நிரம்பவும் துடியாக நடந்தவனாய், “வாருங்கள் காட்டுகிறேன். மடியில் கனம் இருந்தால் அல்லவா வழியில் பயம். இந்த வீட்டையும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் எங்களுக்குள் இருக்கும் மற்ற வீடுகளையும் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறிய வண்ணம் போலீசார் மூவரையும் அழைத்துக் கொண்டு போய் முதற்கட்டில் இருந்த சகலமான அறைகளையும் மறைவான இடங்களையும் காட்டிய பிறகு அது போலவே இரண்டாவது மூன்றாவது கட்டுகளுக்குள்ளும் நுழைந்து ஓரிடம்விடாமல் அவர்களுக்குக் காட்டினான். அதன் பிறகு எல்லோரும் மேன் மாடத்தில் ஏறி இரண்டு உப்பரிகைகளுக்குள்ளும் நுழைந்து நன்றாக ஆராய்ச்சி செய்தனர். சட்டைநாத பிள்ளையும் எவ்விடத்திலும் காணப்படவில்லை. அதுவுமன்றி மாசிலாமணி அந்தச் சதி ஆலோசனையில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதைக் காட்டக் கூடிய தஸ்தாவேஜியாவது, வேறு எவ்வித அறிகுறியாவது காணப்படவில்லை. இன்ஸ்பெக்டர் நிரம்பவும் கூர்மையான பகுத்தறிவும் யூகமும் வாய்ந்தவர் ஆதலால், புதிதாகக் கட்டப்பட்ட உப்பரிகைகளில்