பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

91


அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் மகிழ்ச்சியாகவும் அவநம்பிக்கை யோடும் நகைத்து, “பேஷ்! நல்ல யோசனை சொல்லுகிறீர்! இப்படி எல்லாம் சொன்னால், நீர் குற்றமற்றவர் என்று நான் எண்ணிக் கொள்வேன் என்று தடயுடலாகப் பேசுகிறீரா? அந்த மாதிரியே வீட்டை இடித்துவிட்டுப் பார்க்க வேண்டும் என்று துரைத்தனத்தார் உத்தரவிட்டால், அதை யார் தடுக்க முடியும்? ஒருவராலும் முடியாது. அது இருக்கட்டும். பிறகு பார்த்துக் கொள்வோம்; நாம் இன்னும் பின்புறத் தோட்டத்தைப் பார்க்கவில்லை அல்லவா, அங்கே போய்ப் பார்ப்போம் வாரும்” என்றார்.

உடனே மாசிலாமணி, “ஆகா! அதையும் பாருங்கள். இதோ காட்டுகிறேன். வாருங்கள்” என்று கூறிய வண்ணம், அவர்களை நடத்தி அழைத்துக்கொண்டு பின்புறத்தில் இருந்த விசாலமான தோட்டத்தை அடைந்து, அங்கே இருந்த இரண்டு இடுக்குகள் மறைவிடங்கள் முதலிய சகலமான பாகங்களையும் காட்டினான். தோட்டத்தின் முடிவில் பெருத்த மதில் குறுக்கில் எழுப்பப்பட்டு இருந்தது.

அதைப் பார்த்த இன்ஸ்பெக்டர், “ஏன் ஐயா! இந்த மதில் இப்போது தான் புதிதாகக் கட்டப்பட்டது போல் இருக்கிறதே! உம்முடைய கலியாணத்தின் போது இந்த இடத்தில் வழி இருந்ததே. அதன் வழியாகத்தானே நீங்கள் வடிவாம்பாள் என்ற பெண்ணைப் பக்கத்துத் தெருவில் உள்ள உங்களுடைய இன்னொரு விட்டில் கொண்டுபோய் ஒளித்து வைத்திருந்தீர்கள். இந்த வழியை ஏன் அடைத்துவிட்டீர்?” என்றார்.

மாசிலாமணி, “ஆம். எஜமானே! இங்கே இருந்த வழியை நான் இப்போது தான் அடைந்தேன். இந்த மதில் சமீப காலத்தில் கட்டப்பட்ட புதிய மதில்தான்” என்றான்.

உடனே இன்ஸ்பெக்டர் அந்த மதிலுக்கு அப்பால் ஏதாவது அறை முதலிய மறைவான இடம் இருக்குமோ என்றும், அதற்குள் சட்டைநாத பிள்ளை ஒளிந்து கொண்டிருப்பாரோ என்றும் சந்தேகித்தவராய், அந்த மதிலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு கொய்யா மரத்தின் மேல் ஏறி மதிலின் உச்சியை அடைந்து