பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

93

செய்தேன். அதை நான் ஐம்பது ரூபாய் வாடகைக்கு விடத் தீர்மானித்தேன். எத்தனையோ பேர் வீட்டைப் பார்த்துவிட்டுப் போனார்கள். அவர்களுடைய மதிப்பெல்லாம் முப்பது ரூபாய்க்கு மேல் போகவில்லை. கடைசியில் ஒரு சாயப்பு வந்து அந்த வீட்டை வாடகைக்குக் கேட்டார். அவர் ஹைதராபாத் நவாப்பின் அரண்மனையின் ஏதோ தக்க உத்தியோகத்தில் இருந்தவராம். இந்த ஊருக்குப் பக்கத்தில் உள்ள ராஜகிரியிலோ, அல்லது, பண்டார வாடையிலோ, அவருக்குத் தெரிந்த சாயப்பு யாரோ ஒருவர் இருக்கிறாராம். அவர் அந்த ஊரில் நிலம் வாங்கிக் கொண்டு இந்த ஊரிலேயே இருக்க வேண்டும் என்பது அவருடைய எண்ணம். இந்த வீடு அவருக்குத் திருப்திகரமாக இருக்கிறதென்று 50-ரூபாய் வாடகை கொடுத்து எடுத்துக் கொண்டு, இதில் குடி இருந்து வருகிறார். அவரோடு அவருடைய கோஷா மனைவியும் இருக்கிறாள். அவள் தோட்டப் பக்கத்துக்கு வந்தால் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருப்போர் அந்த அம்மாளைப் பார்க்க நேரும் என்ற நினைவினால், அவர் தாம் இருக்கும் வரையில் இவ்விடத்தில் குறுக்குச்சுவர் ஒன்று போட்டுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்தச் சுவர் போட செலவு ஒன்றும் பிரமாதமாகப் பிடித்துவிடவில்லை. அவர் கொடுத்த ஒருமாத வாடகைப் பணத்தைப் போட்டு இதை எழுப்பிக் கொடுத்தேன். அவ்வளவு தான் விவரம். இதில் தாங்கள் சந்தேகப் படும்படியான விஷயம் ஒன்றுமில்லை” என்றான்.

அந்த வரலாற்றைக் கேட்டவுடனே இன்ஸ்பெக்டரது மனதில் ஒரு விதமான சந்தேகம் தோன்றியது. மாசிலாமணி சட்டைநாத பிள்ளையைக் கொணர்ந்து அந்த வீட்டில் ஒளித்து வைத்திருப்பான் என்றும், அதற்குள் கோஷாஸ்திரீ இருக்கிறாள் என்றால் எவரும் உள்ளே போகமுடியாது என்று நினைத்து அப்படிப்பட்ட கட்டுக்கதையை உற்பத்தி செய்திருப்பான் என்றும் அவர் சந்தேகித்து, தாம் உடனே அந்த வீட்டிற்குப் போய், உள்பக்கம் முழுதும் நுழைந்து பார்த்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டவராய், “மாசிலாமணிப் பிள்ளை! நான் ஏதோ உம்மீது ஒவ்வொரு விஷயத்திலும் சந்தேகப்படுகிறேன் என்று நீர் என்னைப்பற்றி நிஷ்டுரமாகப் பேசுகிறீர். எனக்கு உம்மீதாவது,