பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

மாயா விநோதப் பரதேசி

இந்த உலகத்தில் வேறே எந்த மனிதர் மீதாவது பகைமையே கிடையாது. வேண்டும் என்று மனிதருக்குக் கெடுதல் உண்டாக்க வேண்டும் என்பது எங்களுடைய கருத்தல்ல. எங்களுடைய உத்தியோக லட்சணம் இப்படிப்பட்டது. யாராவது ஏதாகிலும் குற்றம் செய்துவிட்டால், அவர்கள் எங்க்ளுடைய சொந்தத் தகப்பனாராய் இருந்தால்கூட, நாங்கள் தாட்சணியம் பார்க்க முடியாது. தாட்சணியம் பார்த்தால், நாங்கள் இதே வேலையில் நீடித்து இருக்க முடியாது. ஆகையால் யாராய் இருந்தாலும் நாங்கள் செய்ய வேண்டிய சாங்கியங்களைச் செய்துதான் தீர வேண்டும். உம்முடைய விஷயத்தில் மாத்திரம் நாங்கள் இப்படிச் செய்கிறோம் என்று நினைக்காதேயும். இப்போது இந்த ஊர் மாஜிஸ்டிரேட் இருக்கிறாரே, அவர் மற்ற எல்லோரையும் தண்டிக்கிறார், நாங்கள் எல்லோரும் அவரிடம் போய்க் கைகட்டிக் கொண்டு பணிவாக நிற்கிறோமே. அவரே கச்சேரியில் உள்ள சர்க்கார் பொருளை சொந்த உபயோகப்படுத்திக் கொள்ளுவதாக வைத்துக் கொள்ளும். நாங்கள் தாட்சணியம் பாராமல் அவருடைய வீட்டைச் சோதனை போடுவோம். அவரைப்பிடித்து விலங்கிட்டு எங்களுடைய சிறைச்சாலையில் அடைத்து விடுவோம். அவரேன்? என்னையே எடுத்துக் கொள்ளும். நானே ஒரு கைதியிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவனை விட்டுவிடுவதாக வைத்துக் கொள்வோம், இப்போது என் சொல்படி நாய் போலப் படிந்து நடக்கும் இதே ஜெவான்கள் எனக்கு விலங்கிட்டு நிர்த்தாட்சண்யமாக என்னைக் கொண்டு போய் அடைத்து விடுவார்கள். ஆகையால், எங்களுடைய உத்தியோகக் கடமையில் மனிதருடைய முக தாட்சணியத்தைப் பார்க்கவே முடியாது. ஆகையால், நீர் அநாவசியமாக என்மேல் நிஷ்டுரப்படுவதில் என்ன பிரயோசனம்? நீர் இப்போது ஒருவனுடைய பொருளை அபகரித்துக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். உம்மிடம் நான் லஞ்சம் வாங்கிக் கொண்டு உம்மைத் தப்பவைத்து விடுகிறேன். அப்போது உமக்கு சந்தோஷமாக இருப்பது நிச்சயம். உம்முடைய பொருளை இன்னொருவன் திருடிவிடுகிறான். அவனிடம் நான் லஞ்சம் வாங்கிக்கொண்டு, அவனை விட்டுவிட்டால், அப்போது