பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

109

உங்களுக்கும் உதவி செய்ய முன் வருவார்கள். அவனும் அவன் மனைவியும் இப்படிப்பட்ட பற்றற்ற சந்நியாசிகளாக இருக்கிறார்கள். அவனைப் பிடித்து வதைப்பதற்கு என் மனம் இடந்தரவே இல்லை. ஆனாலும் அவனை நாம் அசட்டை செய்து விட்டுவிடவும் முடியவில்லை. நான் யோசித்து யோசித்துப் பார்த்துக் கடைசியில் அவனை மாத்திரமாவது நாம் எப்படியும் பிடித்துக்கொண்டு வந்து நாம் எண்ணியபடி செய்து தான் தீர வேண்டும் என்ற முடிவையே செய்து கொண்டேன். ஆனாலும், அவனை எப்படிப் பிடிக்கிறது என்ற யோசனைதான் திருப்திகரமாகப் புலப்படவில்லை.

மாசிலாமணி:- (சிறிது நேரம் ஆழ்ந்த யோசனை செய்து) ஏது சேர்வைகாரரே நீர் கூட அந்த ஆண்டிப்பயலுடைய வலையில் வீழ்ந்து விட்டீர் போல் இருக்கிறதே! உமக்கு அவன் ஏதாவது சொக்குப்பொடி போட்டு விட்டானா? அவன் எப்போதும் ஏழைக் குறும்பன் ஆயிற்றே! அவனைப் பார்த்து நீர் இரக்கங் கொள்கிறீரே! அவன் வெளிக்கு இப்படி ஆண்டி வேஷம் போடுகிறானே அன்றி அவனைப் போன்ற ஆணவமும் ஆங்காரமும் மூர்க்கமான ஆசா பாசங்களும் உடையவன் இந்த உலகத்தில் வேறே யாரும் இருக்கவேமாட்டான் என்பது என்னுடைய எண்ணம். ஊரில் யார் யாருக்குத் தீங்கு செய்தால் அவனுக்கு என்ன? அவன் என்ன நம்மை எல்லாம் படைத்த ஈசுவரனிடம் சர்வ அதிகாரமும் பெற்ற ஏஜண்டா? உலகத்தில் துஷ்டநிக்ரகம் சிஷ்ட பரிபாலனம் செய்ய மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்ததாகக் கேள்விப்பட்டு இருக்கிறோம். இவன் என்ன? மகாவிஷ்ணுவின் பதினோராவது அவதாரமா? மனிதருக்கு மனிதர் ஆயிரம் சச்சரவுகளும் மனஸ்தாபங்களும் இருக்கும். ஒருவருக்கொருவர் எத்தனை நன்மைகளையோ தீமைகளையோ செய்து கொள்ளுவார்கள். அதில் எல்லாம் அவன் தலையிட்டு ஒருவனுக்காகப் பரிந்து இன்னொருவனைப் பகைத்துக் கெடுதல் செய்வதென்றால், அவன் உண்மையில் பெரிய மனிதனாகமாட்டான். ஒருவன் வாஸ்தவத்தில் சாத்விக புருஷன் ஆகவேண்டுமானால், அவன் சகலமான மனிதரையும் சமமாக பாவிக்க வேண்டும். அவனுக்கு வெறுப்பு விருப்பு என்ற