பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

மாயா விநோதப் பரதேசி

மெயிலில் ஏற வேண்டும். ஆனால், அவர்களை இறக்கமாட்டார்கள். ஒவ்வொரு ஜங்ஷனிலும் அந்த ஆறு வண்டிகளையும் ஒரு ரயிலில் இருந்து கழற்றிக் கொண்டு போய் அப்படியே இன்னொரு ரயிலில் சேர்த்து விடுவார்கள். முடிவில் அவர்கள் மாயூரத்தில் போட்மெயிலை அடையும் போதும், அந்த ஆறு வண்டிகளும், போட்மெயிலில் கோர்க்கப்பட்டு விடும் என்று நினைக்கிறேன்.

இ. சேர்வைகாரன்:- ஆம், அப்படித்தான் செய்வார்கள்.

மாசிலாமணி:- எந்த வண்டியிலும் இஞ்சினுக்குப் பக்கத்தில் தான் முதலாவது, இரண்டாவது வகுப்பு வண்டிகள் பிணைக்கப் பட்டிருக்கும். அவைகளுக்குப் பின்னால் தான் மற்ற சாதாரண ஜனங்களுள்ள மூன்றாவது வகுப்பு வண்டிகள் இருக்கும்.

இ. சேர்வைகாரன்:- ஆம்; வாஸ்தவந்தான்.

மாசிலாமணி:- அந்த ஆறு வண்டிகளில், அவர்களுடைய ஜனங்கள் சுமார் 50-மனிதர்கள் அல்லவா போகப் போகிறார்கள். திகம்பரசாமியார், அவருடைய பெண்ஜாதி, வேலாயுதம் பிள்ளை, அவருடைய பெண்ஜாதி, கண்ணப்பா, வடிவாம்பாள், நடராஜ பிள்ளை, சுந்தரம்பிள்ளை, அவருடைய பெண்ஜாதி முதலிய நம்முடைய பகைவர்கள் எல்லோரும் அந்த 50 ஜனங்களுள் அடங்கியவர்கள் என்பது நிச்சயம். இன்னும் எங்களுடைய வழக்கில், எங்களுக்கு விரோதமாக சாட்சி சொன்னவர்களும், அவர்களுக்கு வேண்டியவர்களுமான வேறு பலரும் அவர்களோடுகூடப் போவார்கள் என்பது நிச்சயம். அத்தனை பேரும் ஒரே அடியாய் மாண்டு போகும்படியான ஒரு காரியத்தை நாம் செய்துவிடலாம் என்று நினைக்கிறேன். அந்தக் காரியத்தை முடிப்பதற்கு அதிகப்படியான ஆள்களும் தேவையில்லை. இரண்டொரு மனிதரை உதவிக்கு வைத்துக் கொண்டு நீர் ஒருவரே போனால், அதுவே போதுமானது. காரியம் எளிதாய் முடிந்து போகும்.

இ. சேர்வைகாரன்:- நாங்கள் எங்கே போகிறது? எப்படிக் காரியத்தை முடிக்கிறது? உங்களுடைய யோசனையை நன்றாகத் திறந்துதான் சொல்லுங்களேன்.