பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

மாயா விநோதப் பரதேசி

வரிசைகளைச் சேர்ந்த நகைகள், பவுன்கள், புடவை ரவிக்கை முதலிய விலை பெற்ற முக்கிய சாமான்கள் எல்லாம் இங்கே வந்துவிட வேண்டும். இந்த மூன்று காரியங்களும் இப்போது இரண்டு மூன்று தினங்களுக்குள் நிறைவேறினால், பிறகு மற்றவர்களுடைய காரியத்தை ஒழுங்குப்படுத்திக் கொள்ளலாம்.

இ. சேர்வைகாரன்:- அதற்கென்ன, அப்படியே செய்து விடுவோம். நீங்கள் சொல்வது போல மற்ற ஏற்பாடுகள் பலிக்காமல் போகுமானால், பிறகு ரயில் வண்டியைக் கவிழ்க்கும் காரியத்தைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம். இப்போது உங்களுக்கு அவசரமாய் முடிய வேண்டிய காரியங்கள் மூன்று. முதலாவது திகம்பரசாமியார் இந்த உலகத்தை விட்டுப்போய் விடும்படி செய்ய வேண்டியது. அதற்கு ஒரு யோசனை தோன்றுகிறது; அப்படிச் செய்து விடலாமா?

மாசிலாமணி:- என்ன யோசனை?

இ. சேர்வைகாரன்:- ஒரு சிறிய பெட்டி தயார்செய்து, அதற்குள் நாலைந்து நாகப்பாம்புகளைப் போட்டு மூடி திகம்பரசாமியாருக்கு அனுப்பிவிட்டால், நமக்குப் பதில் பாம்புகள் வேலை செய்து விடும் என நினைக்கிறேன்.

மாசிலாமணி:- (ஏளனமாகப் புன்னகை செய்து) நல்ல யோசனை சொன்னீர்! காரியம் வெகு சீக்கிரம் பலிக்கும் எந்த விஷயத்திலும் ஆழ்ந்து யோசனை செய்து, பலிதமாகக்கூடிய திறமையான யோசனை சொல்லக்கூடிய நீர்கூட ஏது இப்படிப்பட்ட பைத்தியக்கார யோசனையைச் சொல்ல முன்வந்தது?

இ. சேர்வைகாரன்:- என்ன எஜமானே! நான் சொல்வது எப்படிப் பைத்தியக்கார யோசனையாகும்? அதனால் நம்முடைய எண்ணம் நிறைவேறாதா?

மாசிலாமணி:- எப்படி நிறைவேறும்? முதலில் நமக்குப் பாம்புகள் வேண்டுமே! அதற்கென்ன செய்கிறது? நம்முடைய ஊரில் பிச்சை வாங்கவரும் தொம்பர்கள் கொண்டு வருகிற பாம்புகள் விஷப்பல் சுடப்பட்ட உபயோகமற்ற பாம்புகள் அல்லவா? இவைகள் தானே நமக்குக் கிடைக்கும். இவைகளை வைத்துக் கொண்டு நாம் என்ன காரியத்தைச் சாதிக்கிறது?