பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

மாயா விநோதப் பரதேசி

அனுப்பியது போலத் தயாரிக்கப் போகிறேன். இப்போதிருக்கும் துரையினிடம் நான் போலீஸ் வேலையில் இருந்தவன். ஆகையால், அவருடைய கையெழுத்து இன்ன மாதிரி இருக்கும் என்பது. எனக்கு நன்றாகத் தெரியும். நான் உடனே தஞ்சாவூரில் உள்ள போலீஸ் சூப்பரின்டெண்டெண்டு துரையின் ஆபீசுக்குப் போய், அந்த ஆபீஸ் பெயர் அச்சடித்த சில காகிதங்களைச் சம்பாதித்துக் கொண்டு வந்துவிடுகிறேன். உள்ளே எழுத வேண்டிய விஷயங்களையும் டைப்ரைட்டிங் மிஷினைக் கொண்டு அடிக்கச் செய்து கீழே துரையின் கையெழுத்தைப் போல நானே கையெழுத்திட்டு ஒர் உறையில் போட்டு ஒட்டிக் கையில் எடுத்துக் கொள்ளுகிறேன். அந்தக் கடிதத்தில் என்ன விஷயம் எழுதுகிறதென்றால், அந்த துரை உங்கள் அண்ணன் காணாமல் போன விஷயத்தில் ரகசியமாக விசாரணை செய்ய கும்பகோணம் வந்ததாகவும், வந்த இடத்தில், சட்டைநாத பிள்ளை அணிந்திருந்த சில உடைகளும், வேறு பல முக்கியமான சாமான்களும், கடிதங்களும் கிடைத்திருப்பதாகவும், அவைகளின் உதவியைக் கொண்டு, சட்டைநாத பிள்ளை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் திகம்பரசாமியார் ஏதாவது யோசனை சொல்ல முடியும் என்று தாம் அந்தச் சாமான்களை ஒரு பெட்டியில் வைத்து, ஒரு ஹெட்கான்ஸ்டேபில் வசம் கொடுத்து அனுப்பி இருப்பதாகவும், அது நிரம்பவும் ரகசியமான விஷயம் ஆகையால், பெட்டிக்குள் இருக்கும் சாமான்களை மற்றவருக்குக் காட்டாமல், சாமியார் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கடிதத்தில் டைப் அடித்து உறையில் போட்டு ஒட்டி, அதையும் பெட்டியையும் வாசலில் நிற்கும் ஜெவானிடம் கொடுத்து, சூப்பரின்டெண்டெண்டு துரை அவசரமாகக் கொடுக்கச் சொன்னதாக சொல்லி அவனை உள்ளே அனுப்பி விட்டு, நான் ஒட்டமாக வந்து மறைந்து போகிறேன். சாமியார் கடிதத்தைப் பார்த்தவுடனே அதை உண்மை என்றே நம்பி விடுவான். அவன் எந்த விஷயத்தையும் பிறர் அறியாமல் மறைவாகச் செய்கிறவன். பெட்டிக்குள் என்ன சாமான் இருக்கிறது என்பதைத் தன்னுடைய சேவகன் கூடத் தெரிந்து கொள்ளக்கூடாது என்று நினைத்து தனியான ஒர் அறைக்குள்