பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

மாயா விநோதப் பரதேசி

மாசிலாமணி:- வாஸ்தவமே, நாம் நேருக்கு நேர் இருந்து முடிப்பதானால் எல்லாம் நிச்சயமாகவே முடியும். மறைவில் இருந்து கொண்டே காரியங்களை நடத்த வேண்டி இருக்கிறது. ஆகையால், கொஞ்ச பாகத்தைச் சந்தேகத்தில்தான் விட வேண்டி இருக்கிறது, என்னவோ நாம் செய்யக் கூடியதைச் செய்து பார்ப்போம். பலித்தால் பலிக்கட்டும். பலிக்காவிட்டால் இன்னம் ஏதாவது தந்திரம் செய்வோம். நமக்கு இதோடு ஆயிசு முடிந்தா போகிறது. நாமும் இருக்கப் போகிறோம். அவனும் இருக்கப் போகிறான்; பார்க்கலாம் ஒரு கை.

இ. சேர்வைகாரன்:- (சந்தோஷமாகப் புன்னகை செய்து) அவனும் இருக்கப் போகிறான் என்று ஏன் சொல்லுகிறீர்கள்? அவன் இறக்கப் போகிறான் என்று சொல்லுங்கள்.

மாசிலாமணி:- (சந்தோஷமாக நகைத்து) ஒகோ அப்படியே வைத்துக் கொள்ளுமே! உமக்கேன் வருத்தம்? அதைத்தானே நாம் கோருகிறது.

இ. சேர்வைகாரன்:- நீங்கள் கோரிய மூன்று காரியங்களில் ஒன்று இப்படித் தீர்ந்தது. இரண்டாவது, கலெக்டருடைய பெண்ணை அபகரித்து இங்கே கொண்டு வந்து சேர்க்க வேண்டியது. அந்த விஷயந்தான் கொஞ்சம் சிரமப்படும் என்று நினைக்கிறேன். நான் இதற்கு முன் சென்னைப் பட்டணத்துக்குப் பல தடவைகள் போய் வந்திருக்கிறேன். ஆனாலும், அது நமக்குப் புதிய ஊர். நம்முடைய சொந்த ராஜ்யம் போலிருக்கும் இந்த ஜில்லாவில் நாம் எப்படிப்பட்ட அபாரமான காரியங்களையும் சுலபத்தில் சாதித்து விடலாம். அது அயல்நாடு. அங்கே நமக்கு வேண்டிய வசதிகளும் செளகரியங்களும் கிடைப்பது துர்லபம். ஆனாலும், நாம் எப்படியாவது பிரயத்தனப்பட்டு அந்தக் காரியத்தை முடிக்கத் தான் வேண்டும். ஒரு காரியம் ஆகவேண்டும் என்ற பிடிவாதமான எண்ணம் விழுந்து விடுமானால், அது லண்டன் தேசத்தில் செய்ய வேண்டிய காரியமாக இருந்தாலும் செய்துதான் தீரவேண்டும். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் உண்டாகிறது. அதை எஜமானர் முதலில் தீர்த்து வைத்தால், நான் மற்ற ஏற்பாட்டைச் சொல்லுகிறேன்.