பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

135

அலுவல்களை எல்லாம் முடித்துவிட்டு ஒய்ந்து உட்கார்ந்திருந்த வடிவாம்பாள் அந்தப் புடவையை எடுத்து வைத்து பயபக்தியோடு தைத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அந்த மாளிகையின் கீழ்க்கட்டில் பாத்திரங்கள் சுத்தி செய்து கொண்டிருந்த வேலைக்காரி ஒருத்தியைத் தவிர, வேறே எவரும் காணப்படவில்லை. எல்லோரும் தமது பகற் போஜனத்தை முடித்துக் கொண்டு ஏதோ அலுவலை உத்தேசித்து வெளியில் போயிருந்தனர். வேலாயுதம் பிள்ளையும், அவரது மனைவியும், நாலைந்து மையில் துரத்தில் உள்ள பூவனூர் என்ற ஊரில் இருந்த தங்களது முக்கிய பந்துக்களான சில பெரிய மனிதர்களுக்குப் பாக்கு வைத்து நிச்சயதார்த்தத்திற்கு அழைத்து விட்டு வருவதற்காகப் புறப்பட்டுப் போயிருந்தனர். நடராஜ பிள்ளை நீடாமங்கலத்தில் இருந்த கீர்த்தி வாய்ந்த ஒரு தட்டானிடம் சென்றிருந்தார். கண்ணப்பா உள்ளுரில் ஜரிகைப் புடவைகள் நெய்வதில் மகா தேர்ச்சி அடைந்திருந்தவரான ஒரு பட்டுநூல்காரரது வீட்டிற்குப் போயிருந்தான். அவ்வாறு மற்ற எல்லோரும் நமது இளநங்கையைத் தனியளாய் விடுத்து வெளியிற் சென்றிருந்தனர். ஆதலால், அந்த மடமங்கை முன் கூறப்பட்டபடி தனது மாமியாரினது புடவையின் பிணியை நிவர்த்திப்பதான திருப்பணியைச் செய்து பொழுது போக்கத் தொடங்கினாள். அவள் எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்க வேண்டுமே அன்றி, ஒரு நிமிஷமும் சும்மா இருக்கக்கூடாது என்று அவளது மாமன் மாமியார் கட்டளையிட்டு இருந்ததால், அவள் அந்த வேலையைச் செய்தாளோ என்றாவது, அல்லது, கிழிபட்டுப் போகும் தங்கள் வீட்டு உடைகளைத் தையல்காரனிடம் கொடுத்துத் தைத்துக் கொண்டால், அதனால் வீண் செலவு ஏற்படும் என்ற சிக்கன புத்தியினால் அவர்கள் அந்த வேலையை அவளுக்குக் கொடுத்தார்களோ என்றாவது நமது வாசகர்கள் எண்ணிவிடக் கூடாது. அந்த உத்தம குண மாது தான் பெருத்த கோடீசுவரரது ஏகபுத்திரி என்ற மமதையையாவது, தனது மாமனாரினது வீட்டில் உள்ள எல்லோரும் தன்னை ஒரு தெய்வம் போல மதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செருக்கையாவது சிறிதும் கொள்ளாமல், தனது புக்ககத்து மனிதர்களோடு