பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

141

போய்விட்டதாக ஒப்புக்கொள்; உடனே நான் என் கைகளை எடுத்து விடுகிறேன்” என்று முன்போலக் கீச்சுக் குரலிலேயே பேசினார். அதைக் கேட்ட பெண்ணரசி சந்தோஷமாகப் புன்னகை செய்து, “ஆம், நான் உண்மையில் தோற்றுத்தான் போய்விட்டேன். கண்ணுள்ளவளான என்னை நீங்கள் கண்ணில்லாக் குருடியாக்கி விட்டால், நான் தோற்றுப் போகாமல் எப்படி ஜெயமடைய முடியும்?” என்றாள்.

அந்த மனிதர் நகைத்த வண்ணம், “கண்ணில்லா விட்டால், காது கூடவா இல்லை?” என்றார்.

வடிவாம்பாள், “காதுகள் இருந்து என்ன செய்கிறது? குரல் பழைய குரலாய் இருந்தால் அல்லவா காதுகள் அடையாளம் கண்டுபிடிக்கும்” என்றாள்.

வந்தவர், “வாஸ்தவம் தான். ஆனாலும் கண்களைப் பொத்திக் கொண்டிருக்கும் இந்தக் கைகள் உடம்பில் படுகிறதனால் உண்டாகும் உணர்ச்சியில் இருந்து தெரிந்து கொள்ளலாம் அல்லவா?” என்றார்.

வடிவாம்பாள், “அதுகூட என்னால் முடியவில்லை. என் அறிவு அவ்வளவு மந்த அறிவாக இருக்கிறது. நீங்கள் இன்னார் என்பதைத் தெரிந்து கொள்ள ஏதாவது ஒரு சூசனை இருந்தால் இந்நேரம் நான் சும்மா இருப்பேனா?” என்றாள்.

வந்தவர், “அப்படியானால் நீ தோற்றுப்போன குற்றத்தோடு இப்போது இன்னொரு பெரிய குற்றமும் செய்திருக்கிறாய். அது என்னவென்றால், உன்னுடைய அறிவு அபார சக்தி வாய்ந்த மகா சூட்சுமமான அறிவு. அதை நீ அலட்சியமாக எண்ணி அது மந்த அறிவென்று சொல்லுகிறது சாதாரணமான குற்றமல்ல. அது பெருத்த அபராதம். இந்த இரண்டு குற்றங்களுக்கும் நான் முதலில் உன்னைத் தக்கபடி சிகூரித்து விட்டு அதன் பிறகு நான் என் கைகளை எடுக்கப் போகிறேன்” என்றார்.

அந்த விபரீத வார்த்தையைக் கேட்ட வடிவாம்பாளினது முகம் சடேரென்று மாறுபட்டது. அவளது சந்தோஷம் எல்லாம் பறந்தோடியது. அவ்வாறு தன்னிடம் தாறுமாறாகப் பேசக்கூடிய