பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

மாயா விநோதப் பரதேசி

வாட்டமடைந்திருக்கிறதே! ஏதாவது பலகாரம் கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா? போய் எடுத்துக் கொண்டு வரட்டுமா?” என்று கூறிய வண்ணம் அவனது பாதங்களை மிருதுவாகவும் இன்பகரமாகவும் பிடித்து வருடத் தொடங்கினான்.

நிரம்பவும் வாஞ்சையோடு அந்த மிருது பாஷிணியின் முகத்தை நோக்கிய கண்ணப்பா,“ வடிவூ! நீ கால்பிடித்து விடுவது இருக்கட்டும். இப்படி வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து கொள்” என்று கூறிய வண்ணம் ஆசையோடு அவளைப் பிடித்திழுத்துத் தனது வயிற்றின் பக்கமாகப் பலகையின் மேல் உட்கார வைத்து அனைத்துக் கொண்டு, “நீ என்னுடைய முகம் வாடி இருக்கிறதென்று சொல்லி எனக்கு உபசாரம் செய்வது இருக்கட்டும். உன்னுடைய முகம் என்றைக்கும் இல்லாதபடி நிரம்பவும் வாட்டம் அடைந்து சந்தோஷமற்றுக் காணப்படுகிறதே. அதன் காரணம் என்ன? எனக்குத் தெரியாமல், உன் மனசில் என்ன விதமான கவலை அல்லது விசனம் ஏற்பட்டது? பாதி ராத்திரியில் எல்லோரும் படுத்துத் துங்குகையில் எங்கேயாவது ஒரு பல்லி நகர்ந்தால் கூட, அதை உணர்ந்து விழித்துக் கொள்ளக்கூடிய அவ்வளவு அதிக ஜாக்கிரதையுடைய நீ இந்தப் பட்டப்பகலில் நான் மெத்தைப் படியிலிருந்து இவ்வளவு தூரம் நடந்து வந்து உன் கண்களைப் பொத்துகிற வரையில் மெய்ம்மறந்து சிந்தனையில் ஆழ்ந்து உட்கார்ந்திருந்தாயே! அவ்வளவு பலமாய் உன் மனசைக் கவர்ந்து கொள்ளக்கூடிய விபரீதமான காரியம் ஏதாவது நேர்ந்ததா? நான் நிரம்பவும் சாமர்த்தியமாக என் குரலை அடியோடு வேறாக மாற்றிக் கொண்டதாகச் சொல்லி நீ என்னைப் புகழ்ந்ததைக்கூட நான் ஒப்புக்கொள்ள முடியாது. என் குரலின் அடையாளத்தை நீ கண்டு கொள்ளாததற்கு உன் கவனம் பூர்த்தியாக வேறிடத்தில் சென்று கலவரப்பட்டிருந்ததே முக்கியமான காரணமன்றி, நான் பிரமாதமான சாமர்த்தியம் செய்துவிட்டேன் என்று நினைப்பது சரியல்ல. நான் உனக்குப் பின்னால் வந்து கொஞ்ச நேரம் நின்று பார்த்தேன். நீ எதையோ சிந்தனை செய்தபடி கல் சிலைபோல அசையாமலும், மூச்சுவிடாமலும் உட்கார்ந்திருந்தாய். திடீரென்று நான் உனக்கெதிரில் வந்தால், நீ பயந்து கலங்கிக் குழப்பமடைந்து