பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

மாயா விநோதப் பரதேசி

செய்வானே என்ற கவலையும் என் மனசில் உண்டாயிற்று. இதை எல்லாம் நினைத்துக் கொண்டே நான் முழுதும் மெய்ம்மறந்து கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்துவிட்டேன். அப்படி இருந்த தவறுக்காக எனக்குச் சரியான தண்டனையே கிடைத்தது” என்று கூறிக் கண்ணப்பாவின் புஜத்தின்மேல் தனது கன்னத்தை வைத்துச் சாய்ந்து கொண்டு “அப்பாடா ஜில்லென்று எவ்வளவு சுகமாக இருக்கிறது ஆகா இந்த ஆனந்தம் வேறே யாருக்குக் கிடைக்கும்! என் பாக்யமே பாக்யம்!” என்று கூறி மகிழ்ச்சியே வடிவாக மாறினாள். இணைமிகை இல்லாத அந்த மங்கையர்க்கரசியின் கரைபுரண்டோடிய பிரேமையைக் கண்டு ஆனந்த மயமாக நிறைந்து பூரித்துப் போன கண்ணப்பா தந்தக் குச்சிகள் போல அழகை வழியவிட்ட அவளது கைவிரல்களைப் பிடித்து ஏதோ விஷமம் செய்தபடி நிரம்பவும் உருக்கமாகப் பேசத் தொடங்கி, “வடிவூ! என்ன நீ கூட அறியாதவள் போல இப்படிப்பட்ட கவலைகளுக்கெல்லாம் இடங்கொடுத்து விட்டாயே! நம்முடைய சுவாமியார் சாதாரண மனிதரா? அவருக்கில்லாத யூகமும் தீர்க்கதரிசனமும் வேறே யாருக்கு இருக்கப் போகிறது? சட்டைநாத பிள்ளை முதலிய எதிரிகள் வெளியில் வந்து சுயேச்சையாக இருக்கிறார்கள் என்பதை அவர்தானே தெரிந்து கொண்டு நம்மை முதலில் எச்சரித்தார். அப்படிப்பட்டவர் அயர்ந்து அஜாக்கிரதையாக இருந்து துன்பத்தில் அகப்பட்டுக் கொள்வாரா? அது ஒரு நாளும் நடக்காது. அவர் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதோடு முக்கியமாக நம் எல்லோரையும், கண்மணிகளை இமைகள் காப்பது போல ஜாக்கிரதையாக கண்காணித்துக் கொண்டே தான் இருப்பார். நமக்கு எவ்விதமான கெடுதலும் நேராதென்றே நினைக்கிறேன். அப்படி நேர்ந்தாலும் அவர் அதை நிவர்த்திக்க வழி தேடுவார். அதையும் மிஞ்சி நமக்கு ஏதாவது அபாயம் நேருவதாகவே வைத்துக் கொண்டாலும், அதைப்பற்றி நாம் இப்போது முதல் கவலைப்பட்டுக் கலங்குவதனால் என்ன உபயோகம் இருக்கிறது? நாம் நம்முடைய நல்ல மனசைக் கெடுத்துக் கொள்வது தான் மிஞ்சுமே அன்றி, வருவது வந்தே தீரும். பரீக்ஷித்து மகாராஜன் தன்னைப் பாம்பு கடிக்கப் போகிற