பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

149

அவ்வாறு கீழ்க்கட்டுக்குச் சென்றவள் கால் நாழிகையில் மறுபடி மேலே ஏறி வந்தாள். அதற்குள் தனது கண்களை மூடி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த கண்ணப்பா தனது மனையாட்டியான பேடன்னத்தின் பாதசரங்கள் கலீர் கலிரென்று ஒசை செய்ததைக் கேட்டுப் புன்னகையும் குதூகலமும் தோற்றுவித்த முகத்தோடு அவளது வருகையை எதிர்பார்த்திருந்தான். இன்பமே வடிவெடுத்தது போலவும் லக்ஷ்மி விலாசம் தாண்டவமாடும் அற்புத தேஜசோடும் தேவாமிருதத் துளிகளையும் குளிர்ச்சியையும் அள்ளி வீசிய முகாரவிந்தத்தோடும் திரும்பி வந்த பெண்மணி ஒரு வெள்ளித் தட்டில் கமலாப்பழம், மலை வாழைப்பழம், அதிரசம், சீடை, திரட்டுப்பால், தாம்பூலம் முதலிய வஸ்துக்களையும், இன்னொரு கையில் ஜிலுஜிலென்று குளிர்ச்சியாக இருந்த தண்ணீர் நிறைந்த கூஜாவையும் எடுத்துக் கொண்டு தோகை விரித்த மயில்போலக் கண்கொள்ள அழகோடு வந்து தனது கையில் இருந்த நிவேதனப் பொருட்களை எல்லாம், பலகையின் மேல் பள்ளிகொண்டிருந்த தெய்வத்தின் பக்கத்தில் மட்டுக்கடங்கா பயபக்தி விசுவாசத்தோடு வைக்க, அதைக் கண்ட கண்ணப்பா சந்தோஷ மலர்ச்சியடைந்து, “என்ன இது? நான் தாகத்துக்குத் தண்ணீர் கேட்ட்ால், எனக்குப் பெருத்த விருந்து தயாரித்துக் கொண்டு வந்திருக்கிறாயே! இவ்வளவு சாமான்களையும் போட என் வயிற்றில் இடம் எங்கே இருக்கிறது? நீயும் வந்து உட்கார்ந்துகொள். யார் சுறுசுறுப்பாகவும் அதிக சாமர்த்திய மாகவும் இந்த வேலையைச் செய்கிறார் என்பதைப் பார்க்கலாம்” என்று கூறிய வண்ணம், வடிவாம்பாளை அழைத்துத் தனது பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு, தட்டில் இருந்த அதிரசம் ஒன்றை எடுத்த அதை ஒடித்து அவளது வாயில் ஆசையோடு போட முயன்றான்.

அந்தப் பெண்மணி அவனைத் தடுத்து கையிலிருந்த அதிரசத் துண்டைத் தனது கரத்தில வாங்கி, “என்ன இது? நீங்கள் செய்வது பெருத்த அக்கிரமமாக இருக்கிறதே. சுவாமிக்கு நிவேதனம் ஆவதற்கு முன் சமையல்காரன் சாப்பிடுவது எங்கேயாவது நடக்கிற காரியமா? அப்படிச் செய்வது அடுக்குமா? முதலில் சுவாமி நிவேதனம் ஆகட்டும். எனக்கென்ன அவசரம்?