பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

மாயா விநோதப் பரதேசி

நான்தானா வெயிலில் போய் அலைந்து பிரயாசைப் பட்டுவிட்டு வந்திருக்கிறேன்? நான் நிழலிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். மத்தியானம் சாப்பிட்டது ஜீரணமாவதற்குக்கூட இன்னம் நேரமாகவில்லையே” என்று கூறிய வண்ணம் அந்த அதிரசத் துண்டை அந்தரங்க அன்போடு அவனுடைய வாயில் போட்டுவிட்டு அவனுக்கருகில் நின்றுகொண்டு தட்டிலிருந்த வஸ்துக்களை எடுத்தெடுத்து அவனுடைய வாயில் ஊட்டி உண்பிக்கத் தொடங்கினாள். அவனும் ருசி பார்க்காமல், தான் மாத்திரம் உண்பதைப்பற்றி ஒருவாறு கிலேசமடைந்து வருந்திய கண்ணப்பா சலிப்பாக பேசத்தொடங்கி, “வடிவூ! உன்னிடம் எல்லா குணமும் பொருந்தி இருந்தும் இந்த ஒரு விஷயத்தில் தான் நீ பிடிவாதம் பிடிக்கிறாய். ஆண் பிள்ளைகளுக்கெதிரில் பெண் பிள்ளைகள் எதையும் சாப்பிடக்கூடாதென்ற தப்பான கொள்கையை நீ வைத்துக் கொண்டிருக்கிறாய். அதனால் என் மனம் எவ்வளவு தூரம் புண்படுகிறதென்பது உனக்குத் தெரிகிறதில்லை. நீயும் என்னோடுகூட இப்போது சாப்பிட்டால், அது என் மனசில் எப்படிப்பட்ட ஆனந்தத்தை உண்டாக்கும் தெரியுமா?” என்றான்.

அதைக் கேட்ட வடிவாம்பாள் சந்தோஷமாகப் புன்னகை செய்து கண்ணப்பாவின் அதிருப்தியை விலக்க முயன்றவளாய், “ஏது என் கண்ணப்பாவுக்கு ஒருநாளும் இல்லாமல் என்மேல் இவ்வளவு கோபம் உண்டாகிறது. எல்லாப் பலகாரங்களையும் செய்கிறவர்களாகிய நாங்கள் எங்களுக்கு வைத்துக் கொள்ளாமல் ஏமாறிப் போவோம் என்று பார்த்தீர்களா? எங்களுக்கு மடப்பள்ளி நாச்சியார் என்ற பெயர் ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியாத சங்கதியா? எங்களுக்கு வைத்துக் கொண்டது போக மிச்சந்தானே உங்களுக்கு வருகிறது. அப்படி இருக்க, நாங்கள் இங்கேயும் பங்குக்கு வந்துவிட்டால், பிறகு உங்களுக்கு ஒன்றுமில்லாமல் போய்விடுமே என்று கூறிய வண்ணம், அவனது கோபத்தைத் தணிக்க முயற்சிப்பவள் போல ஒரு கையால் அவனது மோவாயைத் தடவிக் கொடுத்து இன்னொரு கையால் பலகாரங்களை எடுத்து மேன்மேலும் வாயில் ஊட்ட ஆரம்பித்தாள்.