பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

மாயா விநோதப் பரதேசி

எண்ணுகிறவனல்ல என்பது உனக்கு நன்றாகத் தெரியாதா. ‘ஏனடா இவளைச் சாப்பிடச் சொன்னோம். இவள் ஓயமாட்டாளா என்று நான் நினைக்கக் கூடியவனல்ல என்பது உனக்குத் தெரியாதா? அப்படிப்பட்ட அற்ப புத்தி என் கால் தூசியை மிதித்த மனிதனுக்குக் கூட இருக்காதே. அதை நீ நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தும் கொஞ்சமும் யோசனை செய்யாமல் சொல்லிவிட்டாயே! உயிருக்குயிராக மதிக்கும் அன்னியோன்னிய மான பந்துக்கள் ஆயிரங்காலம் ஒருவரோடு ஒருவர் கூட இருந்து சாப்பிட்டு வந்தாலும், அவர்கள் சாப்பிடுகிறார்களே என்ற பொறாமை ஏற்படுமா? மற்றவர் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் ஆசையுமே ஒவ்வொருவருக்கும் இருக்குமன்றி, அது ஒருநாளும் குறையாது. கஷணச்சித்தம் கூடினப்பித்தமாக நடக்கும் குணம் உடையவர்களும், உண்மையான பற்றில்லாதவர்களுமே அப்படிப்பட்ட அற்ப புத்தியோடு நடந்து கொள்ளுவார்கள். இப்போது ஒரு வீட்டில் பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் ஆயிசுகாலம் வரையில் சமையல் செய்து தங்களுடைய புருஷருக்கும் குழந்தைகளுக்கும் போட்டு உண்பித்து வருகிறார்களே, எவ்வளவு காலமானாலும் அவர்களுடைய அன்பு, பயபக்தி விசுவாசம், பணிவு, உருக்கம் முதலிய எதிலாவது குறைவு ஏற்படுகிறதா? ஒருநாளும் ஏற்படுகிறதில்லை. உலக அனுபவத்தைப் பார்க்கப்போனால் காலக்கிரமத்தில் அந்தக் குணங்கள் அதிகரித்து முற்றிக் கனிந்து கொண்டே போவதையே நாம் காண்கிறோம். ஆனால் அதற்கு நீ ஒரு சமாதானம் சொல்ல வருவாய். பெண்பிள்ளைகள் மாத்திரம் அப்படித்தான் நடந்து கொள்ளுவார்கள் என்றும் அது எல்லா ஆண்பிள்ளைகளுக்கும் பொருந்தாது என்றும் நீ சொல்லுவாய். அதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். பெருந்தன்மையும், உண்மையான வாஞ்சையும், தினந்தினம் அதிகரிக்கும் பாசமும் உடையவர்களான எல்லா ஆண்பிள்ளைகளும் தம்முடைய பெண்டு பிள்ளைகளிடத்தில் அதே மாதிரிதான் நடந்து கொள்வார்கள். என் விஷயத்தில் நீ இப்படிப்பட்ட தப்பான வார்த்தையை உன் மனப்பூர்வமாகச் சொல்லி இருக்கமாட்டாய் என்பது நிச்சயமே. நீ வேடிக்கைக்காக இப்படி பேசுகிறாய்