பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

155

புருஷர்களுடைய மனசில் சாசுவதமான நீடித்த வேரூன்றிய அன்பையும் மனோலயத்தையும் திருப்தியையும் சந்தோஷத்தையும் உண்டாக்க வேண்டுமானால், தங்களுடைய சுயேச்சையையும் சுயத்தேவைகளையும் வெளியில் காட்டாமல் அடக்கி, புருஷர்களுக்கு எப்படிப்பட்ட அற்ப மனசஞ்சலமும் உண்டருக்க ஆஸ்பதமாக இராமல் எப்போதும் சந்தோஷம், இன்பம், பணிவு, சேவை முதலியவைகளின் அவதாரம் போலவே இருந்து வரவேண்டும் என்பது இதற்கு முன்னிருந்து சென்றவர் களான உத்தமஸ்திரீ ஜாதிகளின் கொள்கை. அது போலவே நடந்து வரவேண்டும் என்பது என்னுடைய பிடிவாதமான மனஉறுதி. ஆகையால் என் கண்ணம்மா இந்த அற்ப விஷயங்களில் எல்லாம் என்மேல் கோபமாவது அருவருப்பாவது கொள்ளக் கூடாது; நான் கைக்கொண்டிருக்கும் ஸ்திரீ தர்மத்துக்கு யாதொரு பங்கமும் ஏற்படாமல் நீங்கள் என்னை வைத்துக் காப்பாற்ற வேண்டும். அதுவே அடியாளுடைய ஜீவாதாரமான வேண்டுதலை — என்று நிரம்பவும் பணிவாகவும் அடக்கமாகவும் கூறினாள்.

அதைக் கேட்ட கண்ணப்பா முன்னிலும் அதிக வியப்படைந்து நகைத்து, “ஓகோ! அப்படியா சங்கதி! இப்போதுதான் உண்மை விளங்குகிறது. இதற்கு முன்னிருந்த ஸ்திரீகள் எல்லோரும் சேர்ந்து புருஷரைத் தம்முடைய வசப்படுத்தி அடிமைகள் ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்திருக்கும் இந்தச் சதி ஆலோசனையில் நீயும் சேர்ந்து கொண்டிருப்பவள் என்பது இப்போது தான் தெரிந்தது. உன்னுடைய மன உறுதியையும், விவரத்தையும் நான் ஏன் கெடுக்க வேண்டும். உன் பிரியம் போல நடந்து கொள். ஸ்திரீகள் புருஷர்களிடம் அதிகப் பணிவாகவும் அடிமைகள் போலவும் நடப்பதெல்லாம், அவர்களைத் தங்களுக்கு அடிமை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தோடு செய்யப்படும் சூட்சுமம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. இருந்தாலும், இந்தக் காலத்தில் அன்னிய தேசத்துப் படிப்பும் நாகரிகமும் நம்முடைய தேசத்தில் பரவப் பரவ, அந்த சூட்சுமம் எல்லாம்