பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

மாயா விநோதப் பரதேசி

இருந்த இடந்தெரியாமல் போய்க் கொண்டே இருக்கிறது. நீ வேறே எங்கும் போக வேண்டாம். சென்னப் பட்டணத்திற்கு போய்ப் பார். அங்கே வெள்ளைக்காரப் புருஷர்களும் ஸ்திரீகளும் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்று பார். அவர்களைப் போலவே நடந்து கொள்ள வேண்டும் என்று, இங்கிலீஷ் படித்த பெரிய மனிதர்களில் எண்ணிறந்தவர்கள் அவர்களைவிட ஒன்பது படி அதிகமாகவே தாண்டி தத்ரூபம் சீமை மனிதர்களைப் போல நடந்து கொள்ளுகிறார்கள். ஸ்திரீகள் தத்தம் புருஷர்களோடு சேர்ந்து கடற்கரைக்குப் போவதும், பலகாரக் கடைகளில் ஒன்று சேர்ந்து உண்பதும், இன்னும், பயாஸ்கோப், நாடகம் முதலிய இடங்களில் அன்னிய புருஷருக்கிடையில் தம்முடைய மனைவியைக் கொண்டுபோய்த் தமக்கருகில் உட்கார வைப்பதும், இது போன்ற எத்தனையோ புதுமைகளைக் காணலாம். தம்பி கந்தசாமியின் நிச்சயதார்த்தம் நெருங்கிவிட்டது. நாம் எல்லோரும் பட்டணம் போகப் போகிறோமே. அப்போது எல்லா விநோதங் களையும் நீ பார்க்கத்தான் போகிறாய். பட்டணத்தில் நம்முடைய சம்பந்தி வீட்டாரும் புதிய நாகரிகப்படி நடப்பவர்களாகத் தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நீ ஒருத்தி தான் அங்கே இருப்பவர்களுள் சுத்த கர்நாடகமாகவும் பட்டிக்காட்டு மனுவதி யாகவும் விளங்கிப் போகிறாய். அந்தப் பழிப்புக்கெல்லாம் நீ ஆளாக இஷ்டப்பட்டால், நீ உன்னுடைய பிரியப்படியே நடந்து கொள்” என்றான்.

வடிவாம்பாள்:- பட்டணத்துக்கு வந்தால், நான் கவனிக்க வேண்டிய நம்முடைய வீட்டுக்காரியங்களைப் பார்ப்பதிலேயே என் பொழுதெல்லாம் போய்விடப் போகிறது. மற்ற விநோதங் களை எல்லாம் நான் எதற்காகக் கவனிக்கப் போகிறேன். அப்படிக் கவனித்தாலும், அதற்காக நான் என்னுடைய ஒழுங்கை மீறி நடக்கப் போகிறதில்லை. புது நாகரிகக்காரர்கள் என்னை எப்படி தூஷித்தாலும் தூஷிக்கட்டும். கட்டுப்பாடுகளுக்கு அடங்கி நடக்கும் மனிதர்களைக் கண்டால், கட்டுப்பாட்டை மீறி சுயேச்சையாக நடந்து எதை வேண்டுமானாலும் செய்கிறவர்களுக்குப் புரளியாகத்தான் இருக்கும். ஒரு குடும்ப ஸ்திரீ கொண்ட புருஷனுக்கும், மாமியார் மாமனார் முதலியோருக்கும்