பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

163

கொள்கைக்கு நேர் விரோதமானது. இப்போது எல்லா விஷயங்களிலும் வெள்ளைக்காரருடைய நாகரிகமே தலையெடுத்து இந்நாட்டில் பரவி வருகிறது. ஆகையால், வெகுசீக்கிரத்தில் உன்னுடைய கொள்கைகள் எல்லாம் அழிந்து போய்விடுமே என்ற ஒரு பெருத்த ஏக்கம் என் மனசை வாட்டுகிறது. உன்னைப் பற்றி நான் பயப்படவில்லை. யார் என்ன விதமாக நடந்து கொண்டாலும் நீ உன்னுடைய மனவுறுதியில் தளர்வடைய மாட்டாய் என்பது நிச்சயம். ஆகையால், நாம் நம்மைப்பற்றி வருந்தவில்லை. இனி வரப்போகும் சந்ததியாரின் நிலைமை எப்படி இருக்குமோ என்பதுதான் நிரம்பவும் கவலையை உண்டாக்குகிறது. பதினைந்து வருஷ காலத்துக்கு முன் இருந்த நிலைமைக்கும் இப்போதைய நிலைமைக்கும் நூறு மடங்கு வேறுபாடு ஏற்பட்டுப் போய்விட்டது. இன்னம் நம்முடைய ஆயிசு கால முடிவுக்கும் நாம் என்னென்ன மாறுபாடுகளைப் பார்க்க நேருமோ தெரியவில்லை. இதோ நம்முடைய கந்தசாமிக்கு நாம் பார்த்திருக்கிற பெண் மனோன்மணி இருக்கிறாளே, அவள் பி.ஏ., வகுப்பில் படிக்கிறாளாம். அவள் தன்னுடைய புருஷனிடத்தில் எப்படி நடந்து கொள்வாளோ என்னவோ தெரியவில்லை. நம்முடைய கந்தசாமியோ மகா கண்டிப்பான குணம் உடையவன்; எப்படிப்பட்ட மாசற்ற நடத்தை உடைய மனிதர்களிடத்திலும் குற்றங் கண்டுபிடித்துக் கண்டிக்கக்கூடிய மகா நுட்பமான மனசை உடையவன். அவனும் மனோன்மணியும் எப்படி ஒற்றுமையாக இருந்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இதுவரையில் இருந்து இறந்து போனவர்கள் எல்லாம் நல்ல புண்ணியசாலிகள் தான். அவர்களுக்கு எல்லாம் நல்ல பணிவான பதிவிரதா சிரோன்மணிகள் எல்லாம் பெண்ஜாதிகளாக வந்து வாய்த்து, அவர்களுடைய பிரியப்படி நடந்து கொண்டார்கள். இனி ஏற்படப் போகும் தலைமுறையில் உள்ள மனிதர்கள் தங்களுடைய பெண்ஜாதிகளோடு எப்படித்தான் ஒற்றுமையாக இருந்து குடும்பம் நடத்தப் போகிறார்களோ தெரியவில்லை” என்றான்.