பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

173


கண்ணப்பா வேடிக்கையாக நகைத்து, “இப்படிப் புருஷரும் ஸ்திரீயும் ஒத்துழையாக் கொள்கையை மேற்கொண்டு சமத்து வத்தை நாடினால், அதன் பிறகு பிள்ளை குட்டிகள் என்ற பேச்சே இல்லாமல் போய்விடுகிறது. அப்போது உலகமும் வெகு சீக்கிரத்தில் முடிவுக்கு வந்துவிடும் அல்லவா” என்றான்.

வடிவாம்பாள், “ஆம், அதற்குத் தடை என்ன” என்று கூறி மேலே ஏதோ பேச வாய் எடுக்கையில், “அம்மா! அம்மா ஒரு விபரீதச் சங்கதி வந்திருக்கிறது. சீக்கிரம் வாருங்கள்” என்று ஒரு குரல் உண்டாயிற்று. அந்த விபரீதக் குரலைக் கேட்ட கண்ணப்பாவும் வடிவாம்பாளும் திடுக்கிட்டு வேடனைக் கண்ட மான் போல மருண்டு விசிப்பலகையை விட்டுச் சடேரென்று கீழே இறங்கினார்கள். கீழ்க்கட்டில் பாத்திரங்கள் சுத்தி செய்து கொண்டிருந்த வேலைக்காரி மெத்தைப்படியில் நின்று அவ்வாறு கூக்குரல் செய்ததாக அவர்கள் உடனே உணர்ந்து கொண்டனர். கண்ணப்பா, “யார் அது? இப்படி வா? என்ன விபரீதச் சங்கதி வந்திருக்கிறது? சீக்கிரமாகச் சொல்” என்று பதைபதைப்பாக கேட்க, வேலைக்காரி உடனே மேலே ஏறிவந்து அவர்களுக்கு எதிரில் பணிவாக நின்று கொண்டு, “நான் குப்பையை வெளியில் கொண்டுபோய்க் கொட்டப் போனேன். ஜனங்கள் பிரமாதமாகப் பேசி ஆச்சரியப்பட்டுக் கொண்டு ஓடுகிறார்கள்” என்றாள்.

அதைக் கேட்ட கண்ணப்பா பெரிதும் திகைப்பும் வியப்பும் அடைந்து, “ஜனங்கள் எங்கே ஓடுகிறார்கள்? என்ன விசேஷம் நடந்ததாம்” என்றான்.

வேலைக்காரி, “நம்முடைய திகம்பர சாமியார் ஐயா இருக்கிறார்கள் அல்லவா. அவர்களின் மேல் நாலைந்து பாம்புகள் விழுந்து கடித்து விட்டு ஓடிப்போய் விட்டனவாம். அவர் ஸ்மரணை தப்பிப் போய் இறக்கும் நிலைமையில் இருக்கிறாராம். எல்லோரும் அலறியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள் என்றாள்.

அந்தச் சொற்களைக் கேட்ட கண்ணப்பாவும் வடிவாம்பாளும் பிரமித்து ஸ்தம்பித்துத் துடிதுடித்துப் போயினர். தாங்கள் கேட்பது மெய்யோ பொய்யோ என்றும், ஒருவேளை அந்த வேலைக்காரிக்குப் பைத்தியம் பிடித்துப் போயிருக்குமோ