பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

மாயா விநோதப் பரதேசி

என்றும் சந்தேகிக்கத் தொடங்கினரே அன்றி திகம்பர சாமியாருக்கு அத்தகைய பெருத்த அபாயம் நேர்ந்திருக்கலாம் என்ற எண்ணத்தையே கொள்ள மாட்டாதவராய்ப் பதைபதைத்துப் போயினர்.

மறுபடியும் கண்ணப்பா வேலைக்காரியைப் பார்த்து, “நீ சொல்வது நம்பத்தகாத விஷயமாக இருக்கிறதே. நம்முடைய சுவாமியாரை நாலைந்து பாம்புகள் கடித்து விட்டன என்கிறாய். அத்தனை பாம்புகளும் எங்கே கூடியிருந்தன? அவர் அந்த இடத்திற்கு எதற்காகப் போனார்? நாலைந்து நல்ல பாம்புகள் அவரைக் கடித்தால், அவர் அதே கூடிணத்தில் விழுந்து இறந்து போய்விடுவார். உடனே பாம்புகளும் ஓடிப்போய் விடும். அவர் தம்மைப் பாம்புகள் கடித்ததென்று எப்படி வெளியிட்டிருக்க முடியும்? ஜனங்கள் சொல்லும் விவரத்தையும் அவர்கள் அவருடைய ஜாகைக்கு ஒடுவதையும் கவனித்துப் பார்த்தால், அவருக்கு அந்த விபத்து அவருடைய பங்களாவிலேயே நேர்ந்திருக்க வேண்டும் என்றல்லவா நாம் நினைக்க வேண்டிருக்கிறது. அவருடைய பங்களாவில் அதிக அடைப்புகளாவது நெருக்கமான பூச்செடிகளாவது இல்லையே. அப்படி இருக்க, ஒரே காலத்தில் நாலைந்து பாம்புகள் அந்தப் பங்களாவுக்குள் எப்படி வந்திருக்கும்? ஒருவேளை அந்தப் பங்களாவில் ஏதாவது பாம்புப் புற்று இருந்து அதை அவர் வெட்டச் சொன்னால், அதற்குள் ஒன்றாகச் சேர்ந்திருந்த பாம்புகள் உடனே வெளிப்பட்டு அவரைக் கடித்திருக்கலாம் என்று நினைப்பதற்கு இடம் உண்டு. எனக்குத் தெரிந்த வரையில், அங்கே பாம்புப் புற்றே இல்லையே” என்றான்.

அதைக் கேட்ட வேலைக்காரி, “அந்த விவரம் எதையும் நான் கேட்கவில்லை. ஜனங்கள் ஓடுகிற அவசரத்தில், நான் கேட்டதற்குச் சரியான உத்தரமே சொல்லாமல் எல்லோரும் பறக்கிறார்கள். பாம்புகள் கடித்தது சாமியார் ஐயாவைத்தானா என்ற விஷயத்தை தெரிந்து கொண்டேன். பாம்புகள் கடித்த உடனே அவர் மயங்கிக் கீழே விழுந்துவிட்டாராம். பக்கத்தில் இருந்த ஜெவான் பாம்புகள் ஓடியதைக் கண்டும், அவருடைய