பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

175

உடம்பில் இருந்த பற்குறிகளைக் கொண்டும், அவைகள் அவரைக் கடித்துவிட்டன என்று தெரிந்து கொண்டு கூக்குரலிட்டானாம். அநேக மந்திரவாதிகளும், வைத்தியர்களும் வந்து கூடி வைத்தியம் முதலிய சிகிச்சைகள் செய்கிறார்களாம். ஆனால் அவர் பிழைக்க மாட்டாராம். இன்னம் கொஞ்ச நேரத்தில் பிராணன் போய்விடும் போலிருக்கிறதாம். மற்ற விபரம் எதுவும் தெரியவில்லை” என்றாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்கும் போதே வடிவாம்பாளின் கண்களில் இருந்து கண்ணீர் வெளிப்பட்டு இரண்டு கன்னங்களின் வழியாகத் தாரை தாரையாக வழிந்தோடத் தொடங்கியது. அங்கம் பதறியது; அவள் பைத்தியம் கொண்டவளைப் போல மாறித் தனது கைகளைப் பிசைந்து கொண்டு, “ஐயோ! தெய்வமே அப்படிப்பட்ட மகானுக்கு இவ்விதமான முடிவை ஏற்படுத்த உன் திருவுள்ளம் இடம் கொடுத்ததா? ஆகா! இதுவும் உன் சோதனையா?” என்று கூறிப் பிரலாபித்துக் கலங்கி அழத் தொடங்கினாள்.

உடனே கண்ணப்பா, “வடிவூ! நாம் இனியும் தாமதித்து இங்கே ஒரு நிமிஷங்கூட இருப்பது தவறு; வா, போகலாம். நாம் வண்டிக்காகக் காத்துக் கொண்டிருப்பதற்குள், காரியம் விபரீதத்துக்கு வந்துவிடும். நாம் இருவரும் நடந்தே அவருடைய ஜாகைக்குப் போவோம்” என்று கூறிவிட்டு வேலைக்காரியைப் பார்த்து, “நீ வாசற்கதவைப் பூட்டிக் கொண்டுபோய், நம்முடைய ஆள்களில் யாரையாவது ஒருவனை உடனே பூவனூருக்குத் துரத்தி அப்பாவுக்கும் அம்மாளுக்கும் இந்தச் சங்கதியைச் சொல்லும்படி செய்துவிட்டு, இங்கே வந்து இரு. அவர்கள் அதற்குள் திரும்பி வந்துவிட்டால், அவர்களுக்கு இந்தச் சங்கதியைச் சொல்லி, உடனே அவர்களை சுவாமியாருடைய பங்களாவுக்கு அனுப்பு” என்று கூறியவுடன் வடிவாம்பாளை அழைத்துக் கொண்டு விரைவாக வீட்டைவிட்டு வெளிப்பட்டு திகம்பர சாமியாருடைய ஜாகையை நோக்கி ஒட்டமும் நடையு மாய்ச் செல்லலானான்.

★ ★ ★