பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

177

ஊர்க்கோடிகளில் தன்னந்தனியான வனமாளிகைகளில் பயமின்றி இருந்து வருகிறார்கள். அவ்வாறு வசித்தவர்களுள் சென்னை பெரிய கலெக்டர் பட்டாபிராம பிள்ளையும் ஒருவர். அவர் சர்க்கார் வேலையில் இருந்து 24-வருஷ காலம் கடத்திவிட்டார். ஆதலால், இன்னம் ஒரு வருஷகாலம் சேவித்துவிட்டு உபகாரச் சம்பளம் பெற்று வேலையில் இருந்து விலகிக்கொள்ள வேண்டிய நிலைமையில் இருந்தமையால், வேலையை விடுத்த பிறகு புரசைப்பாக்கத்திலேயே தமது சாசுவதமான வாசஸ்தலத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தேசத்தோடு, அவர் அவ்விடத்தில் விலைக்குக் கிடைத்த ஒரு பிரம்மாண்டமான பங்களாவை சற்று ஏறக்குறைய 75000 ரூபாய்க்கு வாங்கி அதில் இருந்து வந்தார். அந்தப் பங்களா பூந்தமல்லிக்குப் போகும் ராஜ பாட்டையின் பக்கத்தில் இருந்தது ஆனாலும், அதன் இரண்டு பக்கங்களிலும் சுமார் 1½-பர்லாங்கு தூரத்திற்கு அப்பாலேயே இதர பங்களாக்கள் இருந்தன. அவருடைய பங்களா பாட்டை ஒரமாக அகலத்தில் சுமார் கால் பர்லாங்கும், முன்னுக்குப் பின் நீளத்தில் அரை பர்லாங்கும் பரவி இருந்ததன்றி அதன் நாற்புறங்களிலும் ஒன்றரை ஆள் உயரம் கட்டப்பட்டிருந்த பெருத்த மதில் சுவர்களினால் சூழப்பட்டிருந்தது. அந்தச் சுவர்களின் மேல் ஏறி எவரும் உள்ளே வராதபடி அதன் மேற்புறங்களில் கூர்மையான கண்ணாடித் துண்டுகள் பதிக்கப் பெற்றிருந்தன. பாட்டையை ஒட்டினாற் போல இருந்த முன்பக்கத்து மதில் சுவரில் மேற்குப் பக்கம் நகர்ந்தாற் போல, ஒரு பெருத்த வாசற்படியும் இரும்புக் கம்பிக் கதவுகளும் காணப்பட்டன. அந்தக் கதவின் உள்பக்கத்தில் ஒரு பக்கத்தில் பலகைகளால் அமைக்கப்பட்ட ஒரு சிறிய காவல் வீடு காணப்பட்டது. அதன் முன்பக்கத்தில் எப்போதும் ஒரு பாராக்காரன் உட்கார்ந்திருப்பான். அந்த பங்களாவின் உட்புறத்தில் எங்கு பார்த்தாலும் மா, பலா, நார்த்தை, தென்னை, கமுகு, ஆல், நெல்லி முதலிய விருகூடிங்களும், வாழை மரங்களும் நிறைந்து பெருத்த தோப்புபோல அடர்த்தியாக இருந்தன. தரையில் நாட்டுப் புஷ்பங்களின் பாத்திகளும் சீமை குரோடன்களிருந்த தொட்டிகளும், சிவப்புக் கற்றாழை, மருதாணி முதலியவற்றின்