பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

179

அல்லது கட்சிக்காரர்களோ வருவார்களானால், அவர்களோடு பேசுவதற்கு அந்த இடம் ஒரு தர்பார் மண்டபம் போல உபயோகிக்கப்பட்டு வந்தது. ஆகையால், அந்த இடம் நிரம்பவும் அலங்காரமாகக் காணப்பட்டது. அவ்விடத்தில் பளபளப்பான விலை உயர்ந்த நாற்காலிகளும், சோபாக்களும், பூத்தொட்டிகளும், மேஜைகளும், சட்டப் புஸ்தகங்கள் நிறைந்த கண்ணாடி பீரோக்களும், அலமாரிகளும் காணப்பட்டன. சுவர்களில் மான் கொம்புகளும், படங்களும் நிறைந்திருந்தன. மேலே இருந்து மின்சார விசிறிகளும் விளக்குகளும் தொங்கிக் கொண்டிருந்தன. தரை முழுதும் வழுவழுப்பான பிரப்பம் பாயினால் மூடப்பட்டிருந்தது. அந்தக் கூடத்தில் இருந்து அப்பால் உள்ள விடுதிகளுக்குப் போக இரண்டு வாசல்கள் காணப்பட்டன. அவற்றின் கண்ணாடிக் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. ஆனாலும், ஜரிகைப்புட்டாக்கள் நிறைந்த பனாரீஸ் பட்டுத் திரைச் சீலைகள் தொங்கவிடப்பட்டு வழிகள் மறைக்கப்பட்டிருந்தன. அந்த வாயில்களின் வழியாக நாம் உள்ளே சென்றால், அப்புறத்தில் சகலமான வசதிகளும் நிறைந்த பல அறைகளும், சிறிய கூடங்களும், தாழ்வாரங்களும் காணப்பட்டன. ஒரு தாழ்வாரத்தின் நடுவில் இருந்து மேலே சென்ற படிகளின் வழியாக ஏறிச் சென்றால், அது மேன்மாடத்தில் கொண்டு போய்விடுகிறது. அவ்விடத்தில் கட்டில் மெத்தைகள் நிறைந்த செளகரியமான சயனக்கிரகங்களும், புஸ்தக சாலை முதலிய அறைகளும் முன் பக்கத்தில் தாழ்வாரமும் அமைந்திருந்தன. அடிக்கட்டில் இருந்தது போல மேன்மாடத் திலும் பூத்தொட்டிகள், நாற்காலிகள், சோபாக்கள், மேஜைகள், நிலைக்கண்ணாடிகள், படங்கள் முதலிய அலங்காரங்கள் எல்லாம் சம்பூர்ணமாக நிறைந்திருந்தன. அவ்வளவு பிரம்மாண்டமான பங்களாவின் நடுவில் அத்தனை வைபவங்களோடு கூடியிருந்த மாளிகைக்குள் மேன்மாடத்தில் ஒரே ஒரு யெளவன மங்கை காணப்பட்டாள். அவள் இருந்த விடுதிக்குப் பக்கத்தில் அவள் கூப்பிடும் குரலுக்கு விடைகொடுக்க ஒரு பணிப்பெண் எப்போதும் ஆஜராய் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அந்தக் கட்டிடத்தின் அடிக்கட்டின் பின்பாகத்தில் வெகு துரத்திற்கு