பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

மாயா விநோதப் பரதேசி

பூக்கள் நிறைந்த வெல்வெட்டு கரைகள் வைத்துத் தைக்கப்பட்டிருந்தன. அந்தச் சேலையின் ஒரங்களிலும் அவள் அணிந்திருந்த இங்கிலிஷ் ஜாக்கெட்டுகளிலும் ஏராளமான தொங்கல்கள் (லேஸ்கள்) வைத்துத் தைக்கப்பட்டிருந்தன. அவளது தேகம் சதைப்பிடிப்பின்றி மெலினம் அடைந்திருந்ததானாலும், அவளது சிரத்திலிருந்த அளகபாரம் மாத்திரம் கன்னங்கரேல் என்று கருத்துப் பெருத்துச் சுருள்விழுந்து காடு போல அடர்ந்து கணைக்கால் வரையில் நீண்டதாக இருந்தது ஆகையால், வேலைக்காரி அதை அழகாகப் பின்னி விசாலமான ஜடை போட்டு, அதன்மேல் ஒரு ரோஜாப் புஷ்பத்தையும் வைர ஜடைபில்லை ஒன்றையும் சொருகி வைத்திருந்தாள். ஆதலால், அந்த ஜடை கட்டிலில் வெகு நீளம் நீண்டு கிடந்து அவளது பின் அழகை நிரம்பவும் சிறப்பித்துக் கொண்டிருந்தது. தான் படித்து வந்த கலாசாலையில் மற்ற எவரும் முகத்தில் மஞ்சள் பூசி நீராடுவதே இல்லை என்று அவள் உணர்ந்து கொண்டாள் ஆகையால், தான் மாத்திரம் அவ்வாறு செய்து கொண்டால், கலாசாலையின் தலைவியான வெள்ளைக்கார உபாத்தியாயினிக்கு அது ஒருவேளை அருவருப்பாக இருக்குமோ என்ற நினைவினால் அந்த மடந்தை மஞ்சள் பூசி நீராடுவதைப் பல வருஷங்களுக்கு முன்னிருந்தே நிறுத்திவிட்டு ரோஸ்பவுடர் முதலிய வஸ்துக்களை உபயோகித்து வந்தாள். கண்ணுக்கு மை திட்டிக் கொள்வதை வெள்ளைக்கார ஸ்திரிகள் அநாகரிகம் என்று மதிப்பதால், அதையும் நமது மனோன்மணி விலக்கிவிட்டாள். நெற்றியில் கருஞ்சாந்துத் திலகமிடுவதைக் கண்டு வெள்ளைக்கார உபாத்தியாயினிகள் சிறிதளவு பொறுமை காட்டினர் ஆதலாலும், மற்றப் பெண்கள் திலகமிட்டுக் கொண்டு வந்தனர் ஆதலாலும், மனோன்மணி அதை மாத்திரம் விலக்காமல் வைத்துக் கொண்டிருந்தாள். அது நிற்க, தாம்பூலந் தரிக்கும் வழக்கமே வெள்ளைக்காரரிடம் இல்லை. ஆதலால், நம்மவர் தாம்பூலம் தரித்து வாய், பல் முதலியவற்றைச் சிவக்க வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டால், அவர்கள் நம்மைக் காட்டு மனிதர்கள் என்று நினைப்பதால், மனோன்மணி தாம்பூலம் என்று ஒரு வஸ்து இருக்கிறது என்பதை மறந்து, தனது பற்களை