பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

183

வெள்ளை வெளேர் என்று துல்லியமாக வைத்துக் கொண்டிருந்தாள். அவளது பக்குவ காலத்திற்குத் தக்கபடி முகத்தில் சதைப்பிடிப்பு ஏற்படாமல் இருந்ததனால், அவள் வாயைத் திறந்த போதெல்லாம், பளிச்சென்று பிரகாசித்த பற்கள் முகத்திற்குத் தேவையான அளவிற்கு மிஞ்சிப் பெருத்திருப்பது போலத் தோன்றி விகாரப்படுத்தின. ஆனால், அவள் வாயைத் திறவாமல் மற்ற அலங்காரங்களோடு வெல்வெட்டு ஜோடு தரித்து நடக்கும்போது, பார்சீ தேசத்து ராஜகுமாரி போல அற்புத வனப்போடும் வசீகரத்தோடும் காணப்பட்டாள். தான் வித்தை கற்க வேண்டும் என்ற ஒருவித அறிவுத் தாகமும், மனோவேகமும் மாத்திரம் அவளிடம் மிதமிஞ்சி இருந்ததாகக் காணப்பட்டனவே அன்றி, யெளவன காலத்திற்குரிய பஞ்சேந்திரிய வேட்கை எல்லாம் வறண்டு மலினமடைந்து போனதாகவே தோன்றியது. ஆகையால், தான் ஒரு புருஷனை அடைய வேண்டும் என்ற தாகமாவது, குடும்ப வாழ்க்கையில் தான் ஈடுபட்டு அதன் சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற பிரேமையாவது அவளது மனதில் தோன்றி அவளை ஊக்கியதாகத் தோன்றவே இல்லை. தான் இங்கிலிஷ் பாஷையில் பி.ஏ., பட்டம் பெற்றவள் என்ற பெயர் வாங்க வேண்டும் என்பதும், அந்தப் பாஷையில் தான் வாக்கு வன்மையோடு அழகாக எவருடனும் பேசும் திறமையைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதும், அந்தப் பாஷையில் உள்ள சகலமான புஸ்தகங்களையும் கற்று மேதையாக வேண்டும் என்பதே அவளுடைய முழுமனதையும் கவர்ந்த பெரு வேட்கையாக இருந்தது. அதுவுமன்றி, இங்கிலீஷ் பாஷை படிக்காத மனிதர் மனிதரல்ல என்றும், அவ்வாறு இருந்து உழலும் நமது நாட்டு ஸ்திரீகள் எல்லோரும் அறிவில் நிரம்பவும் தாழ்ந்த நிலைமையில் இருப்பவர்கள் என்றும் இந்த நாட்டில் தன்னைப் போல ஒவ்வொரு ஸ்திரியும் இங்கிலீஷ் படித்து, மேல் நாட்டு கல்வியைக் கரைகாண வேண்டுவது அவசியம் என்றும் அவள் உறுதியாக எண்ணிக் கொண்டிருந்ததாகத் தெரிந்தது. பெண் பாடசாலைகளில் உள்ள உபாத்தியாயினிகளும், மாணவிகளும், தாமும் வெள்ளைக்கார ஸ்திரீகள் பேசுவது போல மிருதுவாகவும் அழகாகவும் பேச வேண்டும் என்ற கருத்தோடு