பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

மாயா விநோதப் பரதேசி

அவர்கள் எங்கே இருந்து வந்திருக்கிறார்களாம்? அந்த விவரத்தை எல்லாம் டலாயத்து விசாரிக்கவில்லையா?” என்றாள்.

வேலைக்காரி, “அவன் விசாரித்துக் கொண்டுதான் வந்திருப்பான். நான் அவனிடம் எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டு வரவில்லை. அவனையே உள்ளே கூப்பிடட்டுமா? இல்லா விட்டால் நான் அவனிடம் போய் எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டு வரட்டுமா?” என்றாள்.

மனோன்மணி, “நீ வரும்போதே எல்லாச் சங்கதிகளையும் நன்றாக விசாரித்துக் கொண்டல்லவா வரவேண்டும். நான் கேட்பதற் கெல்லாம் நீ அடிக்கடி வெளியில் போய் சங்கதியைத் தெரிந்து கொண்டு வருவதென்றால், என் பொழுதெல்லாம் வினாயல்லவா போய்விடும். அவனையே இங்கே கூப்பிடு” என்று கூறிய வண்ணம் கட்டிலை விட்டு இறங்கி, அருகில் கிடந்த ஒரு நாற்காலியின் மீது உட்கார்ந்து கொண்டாள்.

உடனே வேலைக்காரி அங்கிருந்தபடியே, “டலாயத்தையா! இங்கே வாரும்” என்று மிருதுவான குரலில் கூப்பிட, அவன் உள்ளே வந்து குனிந்து வணங்கி மனோன்மணிக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுப் பணிவாக நின்றான்.

உடனே மனோன்மணி, “டலாயத்! வாசலில் யார் வந்திருக்கிறது? அவர்கள் ஆண் பிள்ளைகளா, பெண் பிள்ளைகளா? எங்கே இருந்து வந்திருக்கிறார்களாம்? தாங்கள் இன்னார் என்று அவர்கள் சொன்னார்களா? அப்பா கச்சேரிக்குப் போயிருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்லவில்லையா?” என்றாள்.

உடனே டலாயத், “அம்மணி அவர்கள் கோமளேசுவரன் பேட்டையில் இருந்து வந்திருக்கிறார்களாம். அம்மாள் ஒருவரும், ஐயா ஒருவரும் வந்திருக்கிறார்கள். அவர்களோடு ஒரு வேலைக்காரப் பெண் ஒருத்தி ஒரு தாம்பளத்தில் ஏதோ சாமான்களை வைத்து அதை ஒரு பீதாம்பரத்தால் மூடி வைத்துக் கொண்டிருக்கிறாள். அவர்கள் ஒரு பெட்டி வண்டியில் வந்திறங்கினார்கள். அந்த ஐயாவுக்கு சுமார் 25 வயசிருக்கலாம். அம்மாளுக்கு 20 வயசிருக்கலாம். பார்ப்பதற்கு அவர்கள் தக்க பெரிய இடத்து மனிதர்கள்