பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

மாயா விநோதப் பரதேசி

அவர்கள் அதை ஒப்புக் கொண்டால், அப்படியே செய்து விடுவோம். பிறகு பெரிய எஜமான் வந்து நீங்கள் செய்த காரியத்தைப்பற்றி ஒன்றும் சொல்லமாட்டார்கள்” என்றாள்.

அதைக் கேட்ட மனோன்மணி தனது பொழுது அநாவசியமாய்க் கழிவதை நோக்கி அதிருப்தியும் அவசரமும் காண்பித்தவளாய், “இவர்கள் நினைத்தபோது சொல்லாமல் வருகிறது. உடனே, நான் என்னுடைய அவசர வேலையை எல்லாம் போட்டுவிட்டு இவர்களோடு உட்கார்ந்து பேசவேண்டும். இதனால் என்னுடைய பரீட்சையில் நான் தவறிப்போய், இன்னொரு வருஷம் இதே வகுப்பில் இருந்தாலும் பாதகமில்லை. எப்படியாவது இவர்களுடைய இஷ்டப்படி நான் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நான் இவர்களை அவமரியாதைப் படுத்துகிறதாக எண்ணிக் கொள்ளுகிறதோ? நியாயம் நன்றாய் இருக்கிறது. என்னுடைய சந்தர்ப்பம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் இவர்கள் வந்தது என்னை அவமரியாதையாக நடத்துகிறது என்பது இவர்களுக்கு ஏன் தெரியவில்லை? வெள்ளைக்காரராய் இருந்தால், நாம் இப்படிச் சொல்லி அனுப்புவதைப் பற்றி கொஞ்சமும் வருத்தமே பாராட்ட மாட்டார்கள். முதலில் அவர்கள் இப்படி திடும்பிரவேசமாக வரவே மாட்டார்கள். அதுவும் தவிர, சகுனம், அபசகுனம் என்பதிலேயே எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. நம்முடைய ஜனங்களிடம் காணப்படும் மூடநம்பிக்கைகளில் சகுனம் பார்ப்பதென்பது பெரிய முட்டாள்தனம். அவர்கள் வரும்போது நான் தயாராக இல்லாவிட்டால், அது அபசகுனம். அவர்கள் வரும் போது பூனை குறுக்கே வந்தால் அது அபசகுனம். இதை எல்லாம் நினைக்க நினைக்க, எனக்குச் சிரிப்பு வருகிறது. பூனை வயிற்றுப் பசியைத் தாங்க மாட்டாமல், எங்கேயாவது எலி அகப்படாதா என்று நினைத்துத் தேடிக்கொண்டு போகிறது. அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. மனிதன் மூக்கில் காற்று சிக்கிக் கொள்வதால் தும்முகிறான். அதற்கும் நாம் நினைத்துப் போகும் காரியத்துக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. ஒவ்வோரிடத்திலும் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு மனிதருக்கும் இப்படி ஊமை ஜாடை காட்டிக்