பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

195

ஆலிங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை அடைந்தான் என்றால், மற்றவர்களது திருஷ்டிக்குக் கந்தசாமியின் கட்டழகும் வடிவமும் எவ்வாறு இருந்திருக்க வேண்டும் என்பது கூறாமலே விளங்கும். அவன் ஸ்திரீ வேஷந்தரிக்கும் போதெல்லாம், பெரிய கண்ணாடி ஒன்றில் அவன் தனது அற்புத வடிவத்தைக் கண்டு தனக்குத் தானே பூரிப்பும் ஆனந்தப் பெருக்கும் அடைந்து, அத்தகைய அழகு வாய்ந்த மனைவி தனக்கு வாய்க்கப் போகிறாளா என்று பன்முறை நினைத்து நினைத்து உருகி இருக்கிறான். அதுவுமன்றி, அவன் வேஷந் தரித்திருக்கும் காலத்தில் அவனைக் காண்போர் எல்லோரும், அவனது அற்புத எழிலைக் குறித்து அபாரமாகப் புகழ்ந்து, அவன் ஆண்பிள்ளை என்று எவரும் சந்தேகிக்க இடமே இல்லை என்று பன்முறை உறுதி கூறியதை அவன் கேட்டிருந்தவன் ஆதலால், அவன் மனோன்மணியைப் பார்க்க வந்த காலத்தில், தான் ஆண்பிள்ளை என்பதை எவரேனும் கண்டு கொள்ளுவார்களோ என்ற கவலையையே அவன் சிறிதும் கொள்ளாமல், நிரம்பவும் மனோதிடத்தோடும் துணிகரத்தோடும் அளவற்ற உற்சாகத்தோடும் வந்திருந்தான். அதுவுமன்றி, பெட்டி வண்டியிலேயே போய்ப் பெட்டி வண்டியிலேயே வந்துவிட வேண்டும் என்றும், மனோன்மணியிடம் அரைமணி நேரத்திற்கு அதிகப்படாமல் இருந்து, அவள் சந்தேகப்படாதபடி சம்பாவித்து விட்டுத் திரும்பி வந்துவிட வேண்டும் என்றும் அவர்கள் தீர்மானித்து இருந்தார்கள். ஆதலால், தான் வேஷம் போட்டுக் கொண்டு வந்திருப்பதைப் பிறர் கண்டுபிடிக்கவே சந்தர்ப்பம் ஏற்படாது என்ற உறுதியைக் கொண்டவனாய் வந்திருந்தான் ஆதலால், கந்தசாமி இயற்கையிலேயே பெண்ணாய்ப் பிறந்து பெண் தன்மைகளில் பழகினவன் போல நிரம்பவும் திறமையாக நடித்தவனாய் மனோன்மணி இருந்த விடுதியை அடைந்தான். ஒருகால் மனோன்மணியம்மாள் கேட்பாளாகில், அவனது பெயர் கொடி முல்லையம்மாள் என்று சொல்வதென்று கந்தசாமியும் கோபாலசாமியும் தங்களுக்குள் தீர்மானம் செய்து கொண்டிருந் தனர். கோபாலசாமியோ உயர்ந்த சட்டை, தலைப்பாகை, ஜரிகை வஸ்திரங்கள், தங்க மூக்குக் கண்ணாடி, கைத்தடி, தங்கச்