பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

201

தன்னிடம் வாஞ்சை உள்ள எத்தனையோ உறவினரும், நண்பர்களும் தனக்கு இருந்தாலும், புருஷன் என்ற அந்த அற்புதக் கவர்ச்சி வாய்ந்த ஒரு துணைவன் தனக்கு ஏற்பட்டாலன்றி, தன் மனதிலிருந்த விவரிக்க முடியாத தாகம் தீராதென்று அவள் தனக்குத் தானே உணர்ந்து கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கும் மற்ற ஸ்திரீகளுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. ஒரு பெண் தனது புருஷனிடம் அபாரமான பிரேமையும் பாசமும் உடையவள் ஆகிவிடுவதால், அவள் தனது புருஷனைச் சேர்ந்த மனிதர் எவரைக் காணினும் அவர்களிடத்தில் அபாரமான வாஞ்சை மரியாதை முதலியவற்றை இயற்கையிலே காட்டுவது உலக அனுபவம் அல்லவா. அத்தகைய குணம் மனோன்மணி இடத்தில் காணப்படவில்லை. அவளது மனதில் புருஷனைப் பற்றித் தோன்றிய ஒருவிதமான பிரேமை கந்தசாமி ஒருவனோடு நின்று விட்டதே அன்றி, அவனைச் சேர்ந்த மற்ற மனிதர்கள் வரையில் எட்டவில்லை. ஆகவே, தனது சிறிய மாமியாரும், அவளது புருஷரும் வந்திருப்பதாகக் கேள்வியுற்றவுடனே, அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையாவது ஆவலாவது, அவர்களை உபசரித்து அன்பாக நடத்தி மரியாதை செய்து விருந்தளித்து அனுப்ப வேண்டும் என்ற பிரியமாவது உண்டாகவில்லை. தமக்கு எவ்விதச் சம்பந்தமும் இல்லாத அன்னிய மனிதர் வந்தால், வெளிப் பார்வைக்காக மரியாதை வார்த்தை கூறி உபசரித்து அனுப்புவது போல, அவர்களது விஷயத்திலும் தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டானதே அன்றி அவர்களது விஷயத்தில் ஆழ்ந்த பற்றாவது அன்பாவது தோன்றவில்லை. ஆனாலும், அவள் தனது ஆசனத்தை விட்டெழுந்து சிறிது தூரம் எதிர்கொண்டு வந்து மலர்ந்த முகத்தோடு கொடிமுல்லை அம்மாளைப் பார்த்து, “வாருங்கள். இதோ இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று அன்பாகக் கூறிவிட்டு கோபாலசாமியை நோக்கி, “நீங்களும் அந்த நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று கூறி உபசரித்தாள். அவள் தன்னோடு தாராளமாகப் பேசியதைக் கேட்க, கோபாலசாமியின் மனது கூசியது. அவனது உடம்பு குன்றிப் போயிற்று. ஆனாலும் அவன் அதைக் காட்டிக்