பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

203

கொள்ளக் கூடாது ஆகையால், தான் அவ்வாறு நிற்கிறாள் என்பதைத் தனது பார்வை எளிதில் காட்டும்படி அவள் செய்து கொண்டாள். அந்தக் குறிப்பை அறிந்து கொள்ளாத மனோன்மணி அம்மாள் மிகுந்த வியப்பும் ஒருவித அருவருப்பும் அடைந்தாள். வெளிப் பார்வைக்கு நல்ல அழகும் நேர்த்தியான அலங்காரமும் வாய்ந்து பகட்டாக இருக்கும் கொடி முல்லையம்மாள் அவ்வாறு அநாகரிகமாகவும் மூடத்தனமாகவும் நடந்து கொள்ளுகிறாளே என்றும், அவள் பட்டிக்காட்டு மனிஷி என்றும், எழுத்து வாசனை அறியாத ஞான சூன்யமாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டவளாய், மனோன்மணி மறுபடி அவளை நோக்கி, “ஏனம்மா! விருந்தாளியாக வந்த நீங்கள் நிற்க, நான் உட்காரலாமா? நீங்கள் சொல்லும் வார்த்தை என்னை அவமதிப்பது போல் இருக்கிறதே, நீங்கள் இந்நேரம் வண்டியில் உட்கார்ந்து வந்தது உண்மையே! அதனால் இப்போது நிற்பது காலுக்குச் சுகமாக இருக்கிறது என்பதும் உண்மையாக இருக்கலாம். ஆனாலும் எங்களுடைய மரியாதையையும் கொஞ்சம் கவனிக்க வேண்டாமா? எங்களுடைய வீட்டைத் தேடிவந்த மனிதரை நிற்க வைத்துப் பேசி அனுப்புவது ஒழுங்காகுமா? அல்லது, நீங்கள் நிற்கும் போது நான் உட்கார்ந்து கொள்வதுதான் மரியாதையாகுமா?” என்றாள்.

கொடி முல்லையம்மாள் சந்தோஷமாகப் புன்னகை செய்து, “உங்கள் மனசை ஏன் வருத்த வேண்டும். இதோ நான் உட்கார்ந்து கொண்டேன். தயவு செய்து நீங்களும் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று கூறிய வண்ணம் கோபாலசாமியை மறைத்துக் கொண்டிருந்த ஒரு சோபாவின் பக்கத்தில் போய் மிகுந்த கிலேசத்தோடு சுருட்டி முடக்கிக் கொண்டு தரையில் உட்கார்ந்து கொண்டாள்.

அதைக் கண்ட மனோன்மணி அம்மாளினது வியப்பு அளவிடக் கூடாததாய்ப் பெருகியது. தான் கலியாணம் செய்து கொள்ளப் போகும் கந்தசாமியின் சிறிய தாயார் வெளிப்பார்வைக்கு அவ்வளவு வசீகரமாக இருந்தும், நடத்தையில் சுத்த கர்னாடக மனிஷியாக இருக்கிறாளே என்ற நினைவும், அவளைப்